/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிரப்பப்படாத டாக்டர்கள் காலி பணியிடத்தால் தொடரும் சிக்கல்!: உள்ளூர் நோயாளிகளை ஊட்டிக்கு அனுப்பும் அவலம்
/
நிரப்பப்படாத டாக்டர்கள் காலி பணியிடத்தால் தொடரும் சிக்கல்!: உள்ளூர் நோயாளிகளை ஊட்டிக்கு அனுப்பும் அவலம்
நிரப்பப்படாத டாக்டர்கள் காலி பணியிடத்தால் தொடரும் சிக்கல்!: உள்ளூர் நோயாளிகளை ஊட்டிக்கு அனுப்பும் அவலம்
நிரப்பப்படாத டாக்டர்கள் காலி பணியிடத்தால் தொடரும் சிக்கல்!: உள்ளூர் நோயாளிகளை ஊட்டிக்கு அனுப்பும் அவலம்
ADDED : பிப் 27, 2025 03:21 AM
குன்னுார்: குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில், டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், இங்கு வரும் நோயாளிகளை ஊட்டிக்கு பரிந்துரைக்கப்படும் நிலை தொடர்கிறது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்கள் மற்றும் கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற, இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தன்னார்வலர்கள் நிதி உதவியுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவமனை கட்டடம்; வார்டுகள் பொலிவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், போதிய டாக்டர்கள் இல்லாததால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், ஊட்டி மருத்துவ கல்லுாரிக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
17 பணியிடத்தில் நான்கு பேர்
இந்த மருத்துவமனையில், 17 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள, 6 பேரில் இரு டாக்டர்கள் வேறு இடம் செல்ல உள்ளதால், 4 டாக்டர்கள் மட்டுமே பணி சுமையுடன் நோயாளிகளை கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு வரும் பல நோயாளிகளை கோவைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி வருவது, இங்கு வாழும் மக்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
ஊட்டியில் நடந்த பல அரசு விழாக்களில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர், 'மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கூறி சென்று, மாதங்கள் பல கடந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எந்த நடவடிக்கையும் இல்லை
அதே போல, குன்னுார் தொகுதி எம்.எல்.ஏ.,வான அரசு கொறடா ராமச்சந்திரன், குன்னுார் அரசு மருத்துவமனை சிறப்பாக இயங்குவதாக தெரிவித்து வருகிறார். ஆனால், இங்கு வரும் நோயாளிகள் பெரும்பாலானோர் டாக்டர்கள் இல்லாத காரணத்தால், ஊட்டிக்கு பரிந்துரைக்கப்படுவது குறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
குன்னுார் மருத்துவ மனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இல்லாத நிலையில், சி.டி., ஸ்கேன் மையத்தை தனியார் எடுத்து நடத்துவதால், இங்கு பணம் வசூலிக்கப்பட்டு வருவது, ஏழை எளிய மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் உள்ளது.
சிறப்பு டாக்டர்கள் அவசியம்
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''நீலகிரியில், மாரடைப்பு போன்ற தீவிர இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாததால் 'கோல்டன் ஹவர்ஸ்' நேரமான, 2 மணி நேரத்திற்குள் கோவை, மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது.
அதில், ஒரு சிலரைதான் பிழைக்க வைக்க முடிகிறது. இருதய நோய்க்கு தீவிர சிகிச்சை பிரிவு தேவை என பலகாலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சி.டி., ஸ்கேன் எடுத்தால், அதற்கான சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு டாக்டர்கள் இங்கு யாரும் இல்லை. இதற்கான மாற்றத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.