ADDED : ஆக 14, 2024 02:10 AM

சூலூர்:சூலூர் அருகே நின்றிருந்த லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில், 10 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பஸ், சுல்தான்பேட்டை பகுதியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, நேற்று காலை சூலூர் அடுத்த பாப்பம்பட்டி - செட்டிபாளையம் ரோட்டில் சென்றது.
அப்போது, பாப்பம்பட்டி பெட்ரோல் பங்க் அருகில், லாரி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்நது. அவ்வழியே வந்த கல்லுரி பஸ் எதிர் பாராத விதமாக, லாரி மீது மோதியது. இதில், பஸ் டிரைவர் ரத்னவேல் உள்ளிட்ட, 10 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் பஸ்சில் சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்தினால், அந்த ரோட்டில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.