/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிதி உதவி மறு பதிவேற்றத்தில் 6,764 பேர் பயன் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் தகவல்
/
நிதி உதவி மறு பதிவேற்றத்தில் 6,764 பேர் பயன் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் தகவல்
நிதி உதவி மறு பதிவேற்றத்தில் 6,764 பேர் பயன் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் தகவல்
நிதி உதவி மறு பதிவேற்றத்தில் 6,764 பேர் பயன் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் தகவல்
ADDED : ஆக 20, 2024 02:06 AM

ஊட்டி;'பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,764 பயனாளிகளுக்கு மறு பதிவேற்றம் செய்து நிதி வழங்கப்பட்டுள்ளது,' என, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறினார்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
விவசாயி ரகுநாதன்: கூடலுார் பகுதி விவசாயிகள், குன்னுார், கோத்தகிரி பகுதிகளுக்கு சென்று அந்தப் பகுதி மேரக்காய் விவசாயிகளின் அனுபவத்தை கேட்டறிய தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் நிதி உதவி திட்டம் வாங்கும் பழங்குடியினர் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கான காரணத்தை கூறவேண்டும்
தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர்: மேரக்காய் விற்பனை குறித்து, கோத்தகிரி மற்றும் குன்னுார் விவசாயிகளுக்கு 'அட்மா' திட்ட மூலம் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதி உதவி பெற, வன உரிமை சட்ட ஆவணத்தை பயன்படுத்தி பயன் பெறலாம்.
விவசாயி மனோ கரன்:மாவட்டத்தில் தொடக்கத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு பிரதமர் நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. முதல் முறையாக பதிவு செய்பவர்களுக்கு பதிவு செய்ய முடியவில்லை என புகார்கள் வருகிறது.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர்: பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டம் முற்றிலும் இணைய வழியில் நடக்கிறது. திட்ட பயனாளிகள் பதிவு இ---சேவை மையம் மூலம் நடக்கிறது. ஆரம்ப கட்டத்தில் நில ஆவணங்கள் சரி செய்யப்படாமல் திட்டத்தில் நிதி வழங்கப்பட்டது.
பின், திட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டதால் நில ஆவணங்கள் பயனாளிகள் பெயரில் இருந்தால் மட்டுமே பயன் பெற முடியும். கடந்த, 2 ஆண்டுகளில் 6,764 பயனாளிகளுக்கு மறு பதிவேற்றம் செய்து நிதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயி பிரகாஷ்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் உபகரணங்கள் குறித்து அறிய வேண்டும்;
தோட்டக்கலை துறை இணை இயக்குனர்: தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க திட்டத்தின் கீழ் மண்புழு, நெகிழிக்கூடை, தார்பாலின், நடமாடும் விற்பனை வண்டி, தேன் எடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
விவசாயி சண்முகம்: விவசாயத்தில் பருவநிலை மாற்றம் சவாலாக உள்ளது. விவசாயிகள் நவீன முறையில் சாகுபடி செய்ய அரசு மானியத்துடன் பசுமை குடில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டு ஸ்ட்ராபெர்ரி பயிர் செய்த பலரின் பசுமைகுடில் பாதிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர்: தோட்டக்கலை துறை மூலம் சாதாரண பசுமை குடில் தேவைப்படும் விவசாயிகள் விண்ணப்பித்தால், இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தென்மேற்கு பருவமழையால் பசுமை குடில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.