/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி அணைகளில் 70 சதவீதம் நீர் இருப்பு
/
நீலகிரி அணைகளில் 70 சதவீதம் நீர் இருப்பு
ADDED : ஆக 01, 2024 12:04 AM

ஊட்டி : நீலகிரியில் பரவலாக பெய்த பருவமழைக்கு அணைகளில், 70 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.
நீலகிரியில் குந்தா நீர் மின் வட்டத்திற்கு உட்பட்ட அவலாஞ்சி, எமரால்டு அணைகளுக்கு போர்த்திஹாடா நீர் பிடிப்பு முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததால் இங்குள்ள, 13 அணைகள் மற்றும் 30 க்கு மேற்பட்ட தடுப்பணைகள் தண்ணீரின்றி படிப்படியாக குறைந்தது.
நடப்பாண்டிலும், ஜூன் இறுதி வரை மழை பெய்யாததால் பெரும்பாலான அணைகளின் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பர்பவானி, எமரால்டு, பைக்காரா அணைகளை நம்பியுள்ள கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குடிநீர் வினியோகிக்க முடியாமல் போனதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கை கொடுத்த பருவமழை: தென் மேற்கு பருவமழை தாமதமாக கடந்த ஜூலை, 4 ம் தேதி துவங்கியது. பரவலாக பெய்த மழை, இரு வாரங்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. அணைகளுக்கு, அதிகபட்சம் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்தது.
தற்போது, மழை குறைந்தாலும், வினாடிக்கு, 200 கன அடி வீதம் நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இரு வாரங்களில் அப்பர்பவானியில், 80 செ.மீ., அவலாஞ்சி, எமரால்டில், 105 செ.மீ., பைக்காரா, 90 செ.மீ., மழை பெய்துள்ளது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது, குந்தா, பைக்காரா நீர் மின் திட்ட அணைகளில், 70 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மின் உற்பத்திக்கு போதுமான அளவு தண்ணீ்ர் இருப்பில் இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.