/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
766 மகளிர் குழு பயனாளிகளுக்கு ரூ. 37 கோடி கடன்
/
766 மகளிர் குழு பயனாளிகளுக்கு ரூ. 37 கோடி கடன்
ADDED : செப் 10, 2024 02:49 AM

ஊட்டி:ஊட்டியில் மகளிர் குழுக்களை சேர்ந்த, 766 பயனாளிகளுக்கு, 37 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று, 766 பயனாளிகளுக்கு, 37 கோடி ரூபாய் கடன் வழங்கி பேசுகையில், ''ஆண்களுக்கு நிகராக மகளிரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு கடன் உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடன் உதவி பெறும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் எந்தவொரு தொழில் தொடங்கினாலும் அதனை ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடனும் மேற்கொண்டு வந்தால் அந்த தொழிலில் நீங்கள் லாபம் ஈட்டலாம்.
மகளிருக்கு வழங்கும் கடனுதவி மூலம் சொந்தமாக தொழில், தேயிலை மற்றும் காபி தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தல், மண்பாண்டம் தயாரித்தல், நீலகிரி தைலம் தயாரித்தல், தேன் எடுத்தல், எம்பிராய்டரி உள்ளிட்ட தொழில்களை துவங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்,'' என்றார்.
மகளிர் திட்டம், தாட்கோ, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட முன்னோடி வங்கி உள்ளிட்ட அரசு துறைகளில் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா, மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திலகவதி, கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.

