/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதுமலை யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி ஒப்படைப்பு
/
முதுமலை யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி ஒப்படைப்பு
முதுமலை யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி ஒப்படைப்பு
முதுமலை யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி ஒப்படைப்பு
ADDED : ஏப் 11, 2024 01:30 AM

கூடலுார்:கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாய்க்கன்பாளையம் கோவனார் பகுதியில், 6ம் தேதி, தாயை பிரிந்த குட்டி யானை அதே பகுதியில் சுற்றி வந்தது. வனச்சரகர் சரவணன், வன ஊழியர்கள் குட்டி யானையை மீட்டு, இளநீர், குளுக்கோஸ், பால் பவுடர் கொடுத்தனர்.
வன ஊழியர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து, தாயை கண்டுபிடித்து அதனுடன், குட்டியை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவு, புளியந்தோப்பில் நான்கு பெண் யானைகளுடன் குட்டி யானையை சேர்த்தனர்.
ஆனால், அடுத்த நாள் மாலை குட்டி யானை, கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக திரிந்தது. தொடர்ந்து இரு நாட்கள், குட்டியை வெவ்வேறு யானைக் கூட்டத்துடன் சேர்த்தனர். குட்டி யானை அடுத்த நாள் தனியாக பிரிந்து வந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சீனிவாசன் ரெட்டி உத்தரவிட்டார்.
வனத்துறையினர் குட்டி யானையை நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வாகனத்தில் ஏற்றி, காலை, 10:00 மணிக்கு முதுமலை தெப்பக்காடு யானை முகாமுக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள கராலில் பூஜை செய்து, குட்டி யானையை வைத்து பராமரிக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், முதுமலை வனச்சரகர் மேகலா, பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட யானை பாகன் மற்றும் உதவியாளர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'குட்டி யானை நல்ல நிலையில் உள்ளது. அதன் அருகே யாரும் செல்லாத வகையில், வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றனர்.

