ADDED : மார் 29, 2024 10:14 PM

கூடலுார்:'கூடலுாரில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அறிவிப்பு பலகை மட்டும் போதாது; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, அக்கிரஹாரம் சாலை பிரியும் பகுதியில், திறந்த வெளியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் 'இங்கு குப்பை கொட்டாதீர்; மீறினால் தண்டிக்கப்படுவீர்' என, நகராட்சி சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனினும், தொடர்ந்து திறந்தவெளியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'அப்பகுதிகள் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நகராட்சி மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர்.
அதை தடுக்க நடவடிக்கை இல்லாமல், நகராட்சி ஊழியர்கள் குப்பையை மட்டும் அகற்றி வருகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்தால், மட்டும் போதாது; அறிவிப்பை மீறுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.

