/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 26, 2024 01:41 AM

ஊட்டி;ஊட்டி-கோத்தகிரி இடையே, தொட்டபெட்டா பகுதியில், சாலையோர மரம் விழுந்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டியில் இருந்து, கோத்தகிரி, தும்மனட்டி மற்றும் கெந்தொரை வழித்தடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களுக்கு தொட்டபெட்டா சந்திப்பு வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தவிர, இவ்வழித்தடத்தில், ஆயிரக்கணக்கான தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.
தொட்டபெட்டா சாலையோரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வானுயர்ந்த மரங்கள் நிறைந்துள்ளன. சாலையோரத்தில் போதிய வேர்ப்பிடிப்பு இல்லாத மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன.
இருப்பினும், முழுமையாக அகற்றப்படவில்லை. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, இரவு மற்றும் காலை நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால், நேற்று காலை, 10:30 மணியளவில், தொட்டபெட்டா ஜங்ஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், சாலையோரத்தில் பிடிமானம் இல்லாத மரம் சாலையில் விழுந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் காய்கறி லோடு ஏற்றி, ஊட்டிக்கு சென்றிருந்த லாரி, நுாலிழையில் தப்பியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி அப்புறப்படுத்தினர்.
இதற்கு இடையில், அரசு பஸ்கள் உட்பட, சுற்றுலா வாகனங்கள் சாலையில் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு மரம் முழுமையாக அகற்றப்படுத்தி அடுத்து போக்குவரத்து சீரானது.

