ADDED : ஜூலை 08, 2024 12:20 AM

கூடலுார்;கூடலுார் தொரப்பள்ளி அருகே, சேற்றில் சிக்கி ஆண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார் தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 7 காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொரப்பள்ளி தேன்வயல் அருகே உள்ள, தனியார் வாழை தோட்டத்தில் காட்டு யானை இறந்து கிடப்பது குறித்து நேற்று காலை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
கூடலுார் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். ஆண் காட்டு யானை, சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது.
முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆலோசனைப்படி, சேற்றில் சிக்கிய யானையை, பொக்லைன் உதவியுடன் மீட்டு பிரதேச பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'சேற்றில் சிக்கிய காட்டு யானை வெளியே வர முடியாமல் மூச்சு திணறி உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளது.
பிரேத பரிசோதனை முடிவு கிடைத்த உடன் தான், இறப்புக்கான முழுவிபரம் தெரிய வரும்,' என்றனர்.