/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டணாயக்கன் கோட்டை பரிசல் பயணத்துக்கு தடை ;விபத்து அபாயம் கருதி நடவடிக்கை
/
டணாயக்கன் கோட்டை பரிசல் பயணத்துக்கு தடை ;விபத்து அபாயம் கருதி நடவடிக்கை
டணாயக்கன் கோட்டை பரிசல் பயணத்துக்கு தடை ;விபத்து அபாயம் கருதி நடவடிக்கை
டணாயக்கன் கோட்டை பரிசல் பயணத்துக்கு தடை ;விபத்து அபாயம் கருதி நடவடிக்கை
ADDED : ஏப் 27, 2024 01:25 AM

மேட்டுப்பாளையம்;டணாயக்கன் கோட்டைக்கு, பாதுகாப்பு இல்லாமல், பரிசல் பயணம் செய்வதால், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அங்கு செல்ல பரிசல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில், நூறு ஆண்டுகளுக்கு மேலான டணாயக்கன் கோட்டை உள்ளது. அப்பகுதியில் வசித்த மக்கள், கோட்டையை கோவிலாக மாற்றி, சுவாமி சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
பவானிசாகர் அணையில், 70 அடிக்கு நீர் மட்டம் உயரும் போது, கோட்டை கோவில் தண்ணீரில் மூழ்கி விடும். அணையில் தண்ணீர் குறையும் போது, கோட்டை கோவில் வெளியே தெரியும். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்துபவானிசாகர் அணை நீரில் மூழ்கி இருந்த டணாயக்கன் கோட்டை வெளியே தெரிகிறது. மேலும், கோட்டையை பற்றி சில தகவல்களையும், அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். இதை பார்த்த சுற்றுலா பயணிகள், சிறுமுகை, ரங்கம்பாளையம், சித்தன்குட்டை, கண்ராயன்மொக்கைக்கு வந்து, அங்கிருந்து, பரிசலில் டணாயக்கன் கோட்டைக்கு சென்று வந்தனர்.
கண்ராயன்மொக்கையை சேர்ந்தவர்கள், பரிசல்களில் ஒரு நபருக்கு, 300 ரூபாய் கட்டணம் வசூல் செய்து, ஒரு மணி நேரம், ஆற்றில் பயணம் செய்து அழைத்துச் சென்றனர். கோட்டையை சுற்றி காண்பித்த பின்பு, மீண்டும் அவர்களை அழைத்து வந்து விட்டனர். கடந்த இரண்டு வாரமாக, இக்கிராம மக்கள், இதை ஒரு தொழிலாக செய்து வந்தனர். இங்கு வரும் பார்வையாளர்களில், பெரும்பாலானவர்கள் மது அருந்தி இருப்பதும், பரிசலில் பயணம் செய்யும்போது, தண்ணீரைப் பார்த்து உற்சாக மிகுதியால், சத்தமிட்டும் வந்ததால், பரிசலில் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பவானிசாகர் போலீசார் கண்ராயன்மொக்கை பகுதி பரிசல்காரர்களை அழைத்து, டணாயக்கன்கோட்டைக்கு பார்வையாளர்களை, பரிசலில் அழைத்துச் செல்லக்கூடாது.
பரிசல் பயணம் தடை செய்யப்படுகிறது என எச்சரித்து அனுப்பினர். இதை அங்கு வரும் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், சித்தன்குட்டையிலும், கண்ராயன்மொக்கை பகுதியிலும் விளம்பர அறிவிப்பு வைத்துள்ளனர்.
அதில், பவானிசாகர் அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில், நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால், நீர் பிடிப்பு பகுதியில் இருக்கும், டணாயக்கன்கோட்டைக்கு பரிசல் மற்றும் இயந்திரப்படகு வாயிலாக பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபட்டால், பரிசல் பறிமுதல் செய்து, அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''பரிசல் மற்றும் இயந்திர படகுகள் வழியாக பார்வையாளர்கள் அழைத்துச் செல்லும்போது, அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசமும் வழங்கவில்லை. ஏதேனும் ஆற்றில் விபத்து ஏற்பட்டால், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வருகிறது. இதனாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இக்காரணங்களால், பரிசல் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது,'' என்றனர்.

