/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் காந்தள் 'பவுண்டில்' அடைக்க நடவடிக்கை
/
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் காந்தள் 'பவுண்டில்' அடைக்க நடவடிக்கை
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் காந்தள் 'பவுண்டில்' அடைக்க நடவடிக்கை
ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள் காந்தள் 'பவுண்டில்' அடைக்க நடவடிக்கை
ADDED : மே 26, 2024 11:22 PM
ஊட்டி;'ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடு மற்றும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் காந்தள் 'பவுண்டில்' அடைக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நகரமான ஊட்டியில், சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்களின் நடமாட்டம், நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நகர பகுதியில் போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாத நிலையில், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தினாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கோடை சீசன் நாட்களில், ஊர்ந்து செல்லும் வாகனங்களால், போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில், குதிரை, ஆடு, மாடு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகள் உலா வருகின்றன. இவை நகர முக்கியமான சாலை களில், பெரும்பாலான நேரங்களில் படுத்து விடுவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது.
'சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊட்டி நகர மக்கள் குறிப்பாக, டிரைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 'ஊட்டி நகர சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள், நகராட்சி பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு, காந்தள் பகுதியில் உள்ள 'பவுண்டில்' அடைக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''பவுண்டுகளில் அடைக்கப்பட்ட கால்நடைகளை திரும்ப பெறுவதற்கு, உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தவிர, கால்நடைகளை திரும்ப பெறுவதற்கு தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும், பராமரிப்பு தொகையாக, நாளொன்றுக்கு, 500 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். ஒரே கால்நடைகள், மூன்று முறைக்கு மேல் பிடிபட்டால், அதனை விலங்குகள் வதை தடுப்பு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

