/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21க்கு ஒத்திவைப்பு
/
கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 21க்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 30, 2024 11:05 PM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மாவட்ட நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் நேற்று முன் தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் விசாரணை அதிகாரியான முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரானார். விசாரணையின் போது, 'குற்றம் நடைபெற்ற இடம் தொடர்பாக, இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன' என, அரசு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன், 'சமீபத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமையில் கோடநாடு பங்களா சென்று ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையின் நகலை வழங்க வேண்டும்' என, நீதிபதியிடம் கேட்டார்.
'நிபுணர் குழுவின் அறிக்கையின் நகலை வழங்க முடியுமா' என, நீதிபதி அப்துல்காதர் கேட்டார். 'அதற்கு கால அவகாசம் வேண்டும்' என, அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறினார்.
அதை தொடர்ந்து, வழக்கை ஜூன், 21ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.