/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாரிகள் மெத்தனத்தால் திரும்பி செல்லும் நிதி; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
அதிகாரிகள் மெத்தனத்தால் திரும்பி செல்லும் நிதி; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அதிகாரிகள் மெத்தனத்தால் திரும்பி செல்லும் நிதி; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அதிகாரிகள் மெத்தனத்தால் திரும்பி செல்லும் நிதி; அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 29, 2024 02:48 AM
குன்னுார் : குன்னுார் நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளின் மெத்தனத்தால், 12 கோடி ரூபாய் வரை நிதி திரும்பி சென்ற நிலையில், நிதியை மீண்டும் பெற வலியுறுத்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
குன்னுார் நகராட்சி மாதாந்திர கூட்டம், தலைவர் சுசீலா, தலைமையில், கமிஷனர் சசிகலா முன்னிலையில் நடந்தது.
தி.மு.க., கவுன்சிலர்கள் மணிகண்டன், ஜாகீர், ராமசாமி, ஜெகநாதன், அ.திமு.க., கவுன்சிலர்கள் சரவணகுமார், குருமூர்த்தி ஆகியோர் பேசும் போது, 'ஆற்றோர இடத்தை ஆக்கிரமித்து கட்டிய நபர் உட்பட இருவர் நகராட்சியில், வளர்ச்சி பணிகள் நடக்கும் போது லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
நகரில் கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் 'போட்டோ' எடுத்து மிரட்டுகின்றனர். இந்த நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு போலீசார் மற்றும் கலெக்டரிடம் புகார் அளிக்க வேண்டும்,' என்றனர். இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
கவுன்சிலர் ஜாகிர்: தெரு நாய்கள் தொல்லை மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் குழந்தைகளை கடித்து வருவதால் இதற்கு தீர்வு காண வேண்டும்.
கவுன்சிலர் ராஜ்குமார்: மெத்தனமாக செயல்படும் பொறியியல் பிரிவில், பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட சில அதிகாரிகள் எந்த கேள்விகள் கேட்டாலும், 'வரவில்லை; தெரியவில்லை; பார்க்கவில்லை,' என, எதுவும் தெரியாதது போல பேசுகின்றனர்.
துணை தலைவர் வாசிம் ராஜா பேசுகையில், ''இங்குள்ள, 3 அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். டெண்டர், எஸ்டிமேட் உட்பட அனைத்து பணிகளிலும் மெத்தனமாக செயல்படுவதை கண்டிக்கிறேன். தலைமை செயலக அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்படும்,'' என்றார்.
கவுன்சிலர்களின் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு, 'விரைவில் தீர்வு காணப்படும்,' என, கமிஷனர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து, 'நகராட்சியின், 30 வார்டுகளுக்கும் ஒட்டு மொத்த பிரச்னையாக பொறியியல் பிரிவால் எஸ்.ஏ.டி.பி., நிதி கடந்த, 3 ஆண்டுகளில், 12 கோடி ரூபாய் வரை கிடைக்காமல் போனது: இந்த முறை அந்த நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 6 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
'இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கமிஷனர் கூறியும் அ.தி.மு.க, கவுன்சிலர்கள் போராட்டம் தொடர்ந்ததால், தி.மு.க.,-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'இந்த முறை நிதி கிடைக்க ஏற்பாடு செயயப்படும்,' என, கமிஷனர் மீண்டும் உறுதி அளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.