/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்வி ஒன்றே வாழ்வை மேம்படுத்தும் பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை
/
கல்வி ஒன்றே வாழ்வை மேம்படுத்தும் பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை
கல்வி ஒன்றே வாழ்வை மேம்படுத்தும் பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை
கல்வி ஒன்றே வாழ்வை மேம்படுத்தும் பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஆக 19, 2024 01:46 AM
பந்தலுார்;பந்தலுார் மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில், பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
ஆசிரியர் முர்ஜித் வரவேற்றார். பொது சேவை மைய அமைப்பாளர் நவ்ஷாத் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் பேசுகையில், ''கடந்த காலங்களில் உயர் கல்வி படிப்பதற்கு புத்தகங்கள் கூட கிடைக்காத நிலையில், ஏற்கனவே படித்த மாணவர்களிடம் பழைய புத்தகங்களை பெற்று படித்து வந்த நிலை மாறி, வகுப்புகளுக்குச் செல்லும் முன்னரே அரசு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி ஊக்கப்படுத்துகிறது. அதேபோல் அரசு மூலம் பல்வேறு உதவி தொகைகளும் வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி கல்வியில் சிறந்தவர்களாக வளர வேண்டும்,'' என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், ''மாணவ பருவத்தில் மனது பல்வேறு வகையிலும் அலைபாயும். அதனை தவிர்த்து தங்கள் பெற்றோரின் நிலை மற்றும் தங்களின் சுய வளர்ச்சி குறித்து, ஆலோசித்து கல்வி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படித்தால், வாழ்வில் வெற்றி காண முடியும். நன்றாக படித்தால் உயர் கல்வி படிப்பதற்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி படித்து வாழ்வில் உயர வேண்டும்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்தவும், தினசரி செய்தித்தாள்களை படிக்கவும் முயற்சித்தால் மட்டுமே, போட்டி தேர்வுகளில் சாதித்து தங்களின் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்,'' என்றார்.
தொடர்ந்து, பி.டி.ஏ., தலைவர் ஓய்வு பெற்ற மருத்துவர் கணேசன், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி, பி.டி.ஏ.. உறுப்பினர் இந்திரஜித் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். பரிசு மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர் தண்டபாணி நன்றி கூறினார்.