/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சான்று விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
/
சான்று விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 03, 2024 10:07 PM
பெ.நா.பாளையம் : ஒவ்வொரு விதையும், நல்ல முளைப்பு திறனும், வீரியமும் கொண்டிருத்தல் வேண்டும். வீரியமான விதைகளே, விரைவில் முளைத்து, வாளிப்பான செடிகளை உருவாக்கி, அனைத்து நோய் எதிர்ப்பு சக்திகளையும், தாங்கி, வளர்ந்து, நல்ல முறையில் காய் பிடித்து, அதிக விளைச்சல் தரக்கூடியது. விதை தரத்திற்கு உத்தரவாதம் தருவது விதைச்சான்று நிறுவனமாகும்.
விதை உற்பத்தி தர கட்டுப்பாட்டுக்கு என்று சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்ட முறையே விதை சான்றளிப்பாகும். விதைச்சான்று பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. விதைகளை முளைப்பு சோதனைக்கு உட்படுத்தி, சோதனை முடிவுகளை கொண்டு சான்று அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இவ்விதமான சோதனை விதை உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின்போது, வயல் தரம் மற்றும் விதை தரம் குறித்து, பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்று அளிக்கப்பட்டு, சான்று அட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
விவசாயிகள் சான்று அட்டைகள் பொருத்தப்பட்ட சான்று செய்த விதைகளை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம். மேலும், விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை விதைக்கும் போது, அந்த விதைகள் சரியான முளைப்புத்திறன் உடையவை தானா என, பரிசோதித்து விதைக்க வேண்டும்.
உளுந்து, பாசிப்பயறு, சோளம் போன்ற பயிர்களுக்கு, 75 சதவீதமும், நெல்லுக்கு, 80 சதவீதமும் முளைப்பு திறன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றனர்.