/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போட்டி தேர்வுகளில் நுண்ணறிவு சோதிப்பு மாணவர்கள் தயாராக கருத்தரங்கில் அறிவுரை
/
போட்டி தேர்வுகளில் நுண்ணறிவு சோதிப்பு மாணவர்கள் தயாராக கருத்தரங்கில் அறிவுரை
போட்டி தேர்வுகளில் நுண்ணறிவு சோதிப்பு மாணவர்கள் தயாராக கருத்தரங்கில் அறிவுரை
போட்டி தேர்வுகளில் நுண்ணறிவு சோதிப்பு மாணவர்கள் தயாராக கருத்தரங்கில் அறிவுரை
ADDED : ஆக 31, 2024 02:16 AM
கூடலுார்:'இனி வரும் காலத்தில் எந்த ஒரு போட்டி தேர்விலும் மாணவர்களின் நுண்ணறிவு சோதிப்பு தான் பிரதானமாக இருக்கும்,' என தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலுார் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நுண்ணறிவு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தாளாளர் சுலைமான் தலைமை வகித்தார்.
சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது:
அறிவு என்பது பலவகையான தகவல்களை மூளையில் சேமித்து வைப்பது. உதாரணமாக, 'இருசக்கர வாகனத்தில் ஏன் டீசல் பயன்படுத்த முடியாது; மிளகாய் ஏன் காரமாக இருக்கிறது, சூரியன் எந்த திசையில் உதிக்கிறது,' என்பன போன்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் மூளையில் சேமித்து வைக்கக்கூடிய தகவல்கள்.
ஆனால், நுண்ணறிவு என்பது ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை மூளை சிந்தித்து தேடி கண்டு பிடித்து தருவது.
உதாரணத்திற்கு, 'ஒரு லிட்டர் பாலில் அரை லிட்டர் தண்ணீரை சேர்த்தால், அந்த கலப்பட பாலில் தண்ணீர் எத்தனை பங்கு; பைக்கில் மணிக்கு, 60 கி. மீ., வேகத்தில் செல்லும் ஒருவர், 20 நிமிடங்களில் எவ்வளவு துாரம் செல்வார்,' என்பன, போன்ற கேள்விகள் அவர்களுடைய சிந்திக்கும் திறனை வளர்த்து மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்வதுதான் நுண்ணறிவாகும்.
தற்போதைய கல்வி முறை, மாணவர்களிடையே மூளையில் நிறைய தகவல்களை திணிக்கும் முறையில் தான் உள்ளது. பாட புத்தகத்தில் உள்ள தகவல்களை கேள்விகளாக மாற்றி கேட்பதும், மாணவர்கள் அதற்கு பதில் அளிப்பதும் அறிவு சார்ந்த விஷயமாகும். இத்தகைய கேள்விகள் எல்லாம் நுண்ணறிவை வளர்க்காது.
உண்மையில் கல்வி என்பது மாணவர்களின் சிந்தனை ஆற்றலை அதிகரிப்பதும், சமயோசித புத்தியை வளர்ப்பதும் ஆகும்.
ஆசிரியர்கள் பாட புத்தகத்தில் தரப்பட்டுள்ள தகவல்களை கேள்விகளாக மாற்றி, பதிலை பெறுவது என்ற நடைமுறையின் கூடவே, மாணவர்களது நுண்ணறிவை வளர்க்கும் கேள்விகளையும் பயன்படுத்த வேண்டும்.
நுண்ணறிவை வளர்ப்பதில் கணிதத்தின் பங்கு அதிகம் உள்ளது. இனி வரும் காலத்தில் எந்த ஒரு போட்டி தேர்விலும் மாணவர்களின் நுண்ணறிவு சோதிப்பு தான் பிரதானமாக இருக்கும்.
இதனை புரிந்து கொண்டு, மாணவர்கள் அதற்கேற்ற பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆசிரியர் மணிவாசகம், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.