/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆய்வறிக்கை கிடைத்த பின் அடுத்த கட்ட பணி
/
ஆய்வறிக்கை கிடைத்த பின் அடுத்த கட்ட பணி
ADDED : ஆக 20, 2024 10:10 PM

கூடலுார் : 'கூடலுார் அருகே வீடுகளில் விரிசல் ஏற்பட்டது குறித்து, புவியியல் துறையின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்து கட்ட பணிகள் குறித்து முடிவு செய்யப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேல் கூடலுார் கோக்கால் பகுதியில், ஜூன் மாதம், 27, 28ம் தேதிகளில், பெய்த பலத்த மழையின் போது 'ஒன்றரை சென்ட்' குடியிருப்பு பகுதியில், 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன.
அப்பகுதியில் கடந்த, 7ம் தேதி முதல் மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள், விரிசல் ஏற்பட்ட வீடுகள், கட்டடங்கள், நீரோடைகளின் நீரோட்டம், கழிவுநீர் மற்றும் மழைநீர் வழிந்தோடும் வழிகளை ஆய்வு செய்து, 'நீரோட்டங்களை தடுக்க வேண்டாம்' என, அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, நவீன கருவிகள் மூலம் அப்பகுதியில் 'டிஜிட்டல் சர்வே' மேற்கொண்டனர். மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஐந்து இடங்களில் பூமியில் சிறிய அளவிலான பில்லர் அமைத்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மத்திய புவியியல் துறையினர் திரும்பி சென்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய புவியியல் துறையினர், வீடுகள் மற்றும் நிலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு சென்றனர். அவர்களின், ஆய்வு அறிக்கை குறித்த முடிவு கிடைத்த பின், அதன் அடிப்படையில், அங்கு அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அதுவரை அப்பகுதி மக்கள் வேறு இடங்களில் வசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.