/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை இரவில் பரபரப்பு! அதிகாலை முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு
/
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை இரவில் பரபரப்பு! அதிகாலை முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை இரவில் பரபரப்பு! அதிகாலை முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு
மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை இரவில் பரபரப்பு! அதிகாலை முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு
ADDED : மே 26, 2024 11:40 PM

கூடலுார்:கூடலுார் அருகே வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தையை இரவில் மயக்க ஊசி
செலுத்தி பிடித்து, நேற்று அதிகாலையில் முதுமலையில் வனத்துறையினர்
விடுவித்தனர்.
கூடலுார் ஸ்ரீமதுரை சேமுண்டி பகுதியில், நேற்று முன்தினம் செபாஸ்டின் என்பரின் வீட்டினுள் சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில், தேயிலை செடிகளை கவாத்து செய்து கொண்டிருந்த இடும்பன், 72, வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் இருந்த சிறுத்தை அவரை நோக்கி ஆக்ரோசமாக வந்தது. அவர், உடனடியாக கதவை அடைத்துவிட்டு உயிர் தப்பினார்.
தகவலின் பேரில், கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
மயக்க ஊசி செலுத்த முடிவு
சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால் மயக்க ஊசி செலுத்தி அதனை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. சிறுத்தை பிடிக்கும் பணிகளை முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு சேமுண்டி பகுதிக்கு வந்து சேர்ந்தார்.
தொடர்ந்து, மேற்கூரையில் நின்று ஆய்வு செய்து, வீட்டினுள் இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். சிறுத்தை மயக்க அடைந்ததை தொடர்ந்து, வன ஊழியர்கள் அதனை மீட்டு, கூண்டில் ஏற்றி வாகனம் மூலம், முதுமலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தை உடலை பரிசோதனை செய்த வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதிகாலை விடுவிப்பு
தொடர்ந்து, அதிகாலை, 3:00 மணிக்கு, முதுமலை சீகூர் வனப்பகுதியில், கூண்டிலிருந்து சிறுத்தையை விடுத்தபோது, வனப்பகுதிக்குள் ஓடியது.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுாரில் மீட்கப்பட்ட சிறுத்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. அதனை சீகூர் வனப்பகுதியில் விடுவித்து கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.
இடும்பன் கூறுகையில்,'யாரும் இல்லாத வீட்டில் திடீரென சப்தம் கேட்டது. அதனால், இலை பறிப்பதை நிறுத்திவிட்டு, கதவை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் இருந்த சிறுத்தை என்னை நோக்கி ஆக்ரோசமாக வந்தது. அதனிடம் தப்புவதற்காக கதவை அடைத்து விட்டு ஓடினேன். கதவை அடைக்காமல் இருந்திருந்தால், அது பலரை தாக்கி இருக்கும்,''என்றார். இடும்பனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

