/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓடை வழித்தடம் கண்டறியும் பணி பாதியில் முடக்கம் அன்னுார் மக்கள் அவதி
/
ஓடை வழித்தடம் கண்டறியும் பணி பாதியில் முடக்கம் அன்னுார் மக்கள் அவதி
ஓடை வழித்தடம் கண்டறியும் பணி பாதியில் முடக்கம் அன்னுார் மக்கள் அவதி
ஓடை வழித்தடம் கண்டறியும் பணி பாதியில் முடக்கம் அன்னுார் மக்கள் அவதி
ADDED : ஜூலை 20, 2024 01:24 AM

அன்னுார்:அன்னுாரில் ஓடை வழித்தடத்தை கண்டறியும் பணி பாதியில் முடங்கியது
அன்னுாரில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையாலும், அத்திக்கடவு திட்ட சோதனை ஓட்டத்தாலும், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் 60 சதவீதம் நீர் நிரம்பியது. குளத்து நீருடன், மேற்கு மற்றும் வடக்கு பகுதியிலிருந்து வந்த நீர், தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்றது.
மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நின்றதால் பல ஏக்கரில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகின. வீடுகளை சுற்றி நின்ற நீரால் சுவர்கள் பலம் இழந்தன. இதையடுத்து, குளத்து நீரும், மழை நீரும் செல்வதற்கு ஓடை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி பொதுமக்கள், பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
பேரூராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சத்தி ரோட்டில் இட்டேரி வீதியில் துவங்கி, குன்னத்துாராம்பாளையம் வரை 600 மீட்டர் துாரத்திற்கு உள்ள ஓடை வழித்தடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அறிவுறுத்தினர்.
கடந்த 3ம் தேதி வருவாய்த்துறை, சார்பில் அளவீடு செய்யும் பணி நடந்தது. எல்லை கற்கள் நடப்பட்டன. ஓடை வழித்தடத்தில் உள்ள புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. மொத்தமுள்ள 600 மீட்டரில், 200 மீட்டர் அகற்றும் போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'எங்களுக்கு நோட்டீஸ் தரவில்லை. இது ஓடை வழித்தடம் என்பதற்கான உரிய ஆவணம் இல்லை' என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
பணி நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் துவங்கும் அறிகுறியே இல்லை. இதனால் புவனேஸ்வரி நகர், தர்மர் கோயில் வீதி மற்றும் பழனி கிருஷ்ணா அவென்யூவில் வசிக்கும் மக்கள் தேங்கியுள்ள நீரால் தொடர்ந்து எட்டாவது மாதமாக கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
'விரைவில் ஓடை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி இப்பகுதியில் எட்டு மாதங்களாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், ''கலெக்டர் ஓடை வழித்தடத்தில் குழாய் பதிப்பதற்கு நிதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்படி கூறியுள்ளார். பேரூராட்சி உதவி பொறியாளர் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறார்,''என்றார்.