/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாட்டில் ராணுவத்தினர் 6- குழுக்களாக தேடுதல் பணி
/
வயநாட்டில் ராணுவத்தினர் 6- குழுக்களாக தேடுதல் பணி
ADDED : ஆக 02, 2024 08:33 PM
பந்தலூர்:வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ராணுவத்தினர், 6- குழுக்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது.
கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை, சூரல்மலை, புஞ்சிரிமட்டம், படவெட்டி உள்ளிட்ட பகுதிகள், நிலச்சரிவில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானது. நான்காவது நாளாக நேற்று, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, போலீசார், வனத்துறை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
இதில், ராணுவ மீட்பு குழுவினர் தலைமையில் ஆறு குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும், 30 பேர் வீதம், ஆறு இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவில் சிக்கி நிலைகுலைந்த குடியிருப்புகள் , இடிந்த நிலையில் காணப்படும் குடியிருப்புகள், ஆறு, பாறை இடுக்குகள் உள்ளிட்ட பகுதிகளில், 50-க்கும் மேற்பட்ட பொக்லைன் மூலம், மண் தோண்டப்பட்டு மனித சடலங்கள், கால்நடைகள் புதைந்துள்ளது குறித்து தேடுதல் பணி நடந்தது.
நான்கு பேர் மீட்பு
ஒரு சில வீடுகளில் உள்பகுதியில் மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், லேப்-டாப்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது. படவெட்டி பகுதியில் வீட்டிற்குள் இருந்த நான்கு பேர் மீட்கப்பட்டனர்.
ராணுவத்தினர் அமைத்த பாலம் வழியாக மீட்பு குழுவினர் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. மீட்பு குழுவினர் ஆற்றை கடக்க தனியாக சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய தோட்டங்களிலும் தேடுதல் பணி நடந்தது. பாதி நிலையில் இடிந்த வீடுகளை முழுமையாக இடித்து தேடும் பணியும் நடந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று மாலை காங்., எம்.பி. ராகுல் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.