/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை இடித்த வீட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள்; கோவில் கட்டி ஆண்டவரிடம் முறையிட்ட சிறுவன்
/
யானை இடித்த வீட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள்; கோவில் கட்டி ஆண்டவரிடம் முறையிட்ட சிறுவன்
யானை இடித்த வீட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள்; கோவில் கட்டி ஆண்டவரிடம் முறையிட்ட சிறுவன்
யானை இடித்த வீட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள்; கோவில் கட்டி ஆண்டவரிடம் முறையிட்ட சிறுவன்
ADDED : மார் 06, 2025 09:30 PM

பந்தலுார்'; பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், வனங்களை ஒட்டி காட்டு நாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு அதிகம் வராததுடன், வெளி ஆட்கள் யாரிடமும் எளிதில் பேசுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். மூங்கில் மற்றும் குச்சிகளில் கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவதில், சிறப்பு வாய்ந்தவர்கள்.
அதில், பந்தலுார் அருகே நெலக்கோட்டை குழிமூலா பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சிவன்,9, விலங்கூர் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் களி மண்ணை கொண்டு சிறு உருவங்களை செய்வது; கடவுள் அவதாரங்களின் படங்களை தத்ரூபமாக வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் குடியிருந்த குடிசை வீட்டை, காட்டு யானை இடித்த நிலையில், வீடு இல்லாமல் இவர்களின் குடும்பம் தவித்து வருகிறது. அதிகாரிகள் பலரும் வந்து ஆய்வு செய்து சென்ற போதும், தீர்வு கிடைக்கவில்லை. நாள்தோறும் தனது குடும்பம் கஷ்டப்படுவதை பார்த்த சிவன் மிகவும் கவலையடைந்தார்.
தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சிந்தனையில், யானையால் இடித்த வீட்டின் களிமண்ணை எடுத்து, அதில் சிறிய கோவில் கட்டி, விநாயகர்; ஐயப்பன் சுவாமிகளின் சிறிய சிலை, படங்களை வைத்தார். 'தங்களுக்கு நல்ல வீடு கிடைக்க வழி காட்ட வேண்டும்,' என, பிரார்த்தனை செய்துள்ளார். சிறுவனின் இந்த செயலை பார்த்த பெற்றோர் நெகிழ்ச்சி அடைந்தனர். 'மாவட்ட நிர்வாகம் மனம் வைத்தால் நமக்கு நிச்சயம் வீடு கிடைக்கும்,' என, அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.