ADDED : ஜூன் 26, 2024 10:03 PM
பெ.நா.பாளையம்: பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு விரைவில் துவக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பில், அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் நலனுக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து படிக்க உதவித்தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்படுகிறது.
இவை குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய, நேரடி பயனாளர் பரிமாற்றம் வாயிலாக வங்கி கணக்குக்கு பணம் செலுத்திடும் முறை செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவும், பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் வயது அடிப்படையில் இரண்டு நிலைகளில் வங்கி கணக்குகள் தொடங்கப்படுகின்றன. ஐந்து வயது முதல் பத்து வயது வரை உள்ள மாணவர்களுக்கும், பத்து வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் என, இரு நிலைகளில் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் இணை கணக்காக இவை தொடங்கப்படும். இக்கணக்கினை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து, பராமரிக்க தக்க வகையில் இருக்கும். இதற்கு ஆரம்பத்தொகை ஏதுமில்லாத பூஜ்ஜிய தொகை கணக்காக துவக்கப்படும். அத்துடன் பள்ளிக்கு அருகாமையில் உள்ள தபால் அலுவலகங்களின் விபரங்கள் மற்றும் வங்கிகளின் விபரங்கள் அந்தந்த பகுதி தலைமை ஆசிரியர்கள் தயாரித்து வைத்தல் வேண்டும்.
வங்கி கணக்குகளின் தகவல்களை பள்ளி அளவில் எம்மிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வங்கி கணக்குகள் தொடங்குவதில் இடையூறுகள் ஏதேனும் ஏற்பட்டால், அதை மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு துவக்குதல் மற்றும் ஆதார் விபரங்களை புதுப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.