/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட பூமி பூஜை; வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தி

ADDED : பிப் 21, 2025 10:44 PM
குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் பணிக்கான பூமி பூஜைக்கு, வியாபாரிகளை அழைக்காததால் அதிருப்தி ஏற்பட்டது.
குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், 800 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'பார்க்கிங்' வசதியுடன், 678 கடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ள, திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், 20 கோடி அரசு நிதியுடன், நகராட்சி பொது நிதியில், 21.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைகளை இடிக்க, 1.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மார்க்கெட் கடை உரிமையாளர்களுக்கு மாற்றிடம் வழங்க, உழவர் சந்தை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக கடைகள் அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், குன்னுார் மார்க்கெட்டில், ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்ட (ஐ.யூ.டி.பி) காம்ப்ளக்ஸ் பகுதியில், சுக்கிர ஓரையில், பூமிபூஜை நடந்தது.
அதில், கவுன்சிலர்கள் ராமசாமி, ஜெகநாதன், நாகராஜ், ராஜேந்திரன், குமரேசன், சாந்தா,செல்வி மற்றும் நகராட்சியின் ஓவர்சியர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்றனர். அப்போது, 'வியாபாரிகளையும் அழைத்திருக்க வேண்டும்,' என, தி.மு.க.,வை சேர்ந்த வியாபாரி ஒருவர் வாக்குவாதம் செய்தார். எனினும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இப்பணி, 3 அல்லது 4 கட்டமாக மேற்கொள்வது, எந்த பிரிவு கடைகளை முதற்கட்டமாக மாற்றுவது எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கட்டுமான பொருட்களை கூட்டுறவு வங்கி வழியாக கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.