/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இருசக்கர வாகனத்தில் ஆஸ்திரேலியா பயணம்; பிளாஸ்டிக் ஒழிப்புக்கு விழிப்புணர்வு
/
இருசக்கர வாகனத்தில் ஆஸ்திரேலியா பயணம்; பிளாஸ்டிக் ஒழிப்புக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனத்தில் ஆஸ்திரேலியா பயணம்; பிளாஸ்டிக் ஒழிப்புக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனத்தில் ஆஸ்திரேலியா பயணம்; பிளாஸ்டிக் ஒழிப்புக்கு விழிப்புணர்வு
ADDED : மே 01, 2024 11:18 PM

பாலக்காடு : பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, கேரளாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் சாகச பயணம் செல்கிறார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் குறுக்கோளை சேர்ந்தவர் இர்ஷாத், 31, சவுதியில் தனியார் நிறுவன விற்பனை பிரிவில் பணியாற்றுகிறார். இவருக்கு, தாய் தித்துமா, மனைவி அஸ்ம நஸ்ரின், இரண்டரை வயது மகள் சயா மெஹரின் ஆகியோர் உள்ளனர்.
விடுமுறையில், ஊருக்கு வந்த இர்ஷாத், நண்பன் ஒருவரை அழைத்து, தன் ஸ்கூட்டரில், காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், ஸ்கூட்டரில் கேரளாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். எந்தெந்த மாநிலங்கள், நாடுகள் வழியாக செல்ல வேண்டும் என்பதை அறிந்து, ஒன்றரை ஆண்டு பயண திட்டத்தை அமைத்தார்.
அவரது திட்டத்துக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதன்பின் சம்மதித்தனர். அதன்பின், இர்ஷாத், தன் நண்பன் மொய்னுதீன் காஜாவுடன், 32, கடந்த ஏப்., 28ம் தேதி தன் ஊரில் இருந்து, ஸ்கூட்டரில் ஆஸ்திரேலியாவுக்கு பயணத்தை துவங்கினார். தற்போது, பாலக்காடு மாவட்டம் வந்துள்ளார்.
இர்ஷாத் கூறியதாவது:
இருசக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வது பிடிக்கும். ஸ்கூட்டரில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. அப்படித்தான் ஆஸ்திரேலியாவை தேர்ந்தெடுத்தேன்.
இத்திட்டத்தை செயல்படுத்த பணம் தேவைப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சவுதியில் வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் உணவு 'பேக்கிங்' செய்யும் வேலைக்கு சென்று, பயணத்துக்கு தேவையான செலவில், 70 சதவீதம் சம்பாதித்தேன்.
ரூ.12 லட்சம் செலவு ஏற்படும் என்ற திட்டத்துடன், பயணத்தை துவங்கியுள்ளோம். உணவை சுயமாக சமைத்து சாப்பிட்டும், சாலை ஓரங்களில் டென்ட் அமைத்து தங்கியும் செலவை கட்டுப்படுத்தி பயணம் செய்கிறோம்.
நாட்டில், 26 மாநிலங்கள் வழியாக பயணக்கும் போது, பிளாஸ்டிக் அகற்றல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு செய்கிறோம். நாட்டின் எல்லை தாண்டி, பங்களாதேஷ், மியான்மார், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், பெரி, இந்தோனேசியா ஆகிய நாடுகள் வழியாக பயணம் செல்கிறோம்.
இதில், பெரியில் இருந்து சிறு கப்பல் மார்க்கமாக இந்தோனேசியா சென்று, அங்கிருந்து கப்பல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்கிறோம். பயணம் வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

