/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுக்கப்பட்ட நீர் வழித்தடங்கள்!குன்னுாரில் 84 பருவமழை அபாய பகுதிகள்
/
தடுக்கப்பட்ட நீர் வழித்தடங்கள்!குன்னுாரில் 84 பருவமழை அபாய பகுதிகள்
தடுக்கப்பட்ட நீர் வழித்தடங்கள்!குன்னுாரில் 84 பருவமழை அபாய பகுதிகள்
தடுக்கப்பட்ட நீர் வழித்தடங்கள்!குன்னுாரில் 84 பருவமழை அபாய பகுதிகள்
UPDATED : ஆக 12, 2024 05:46 AM
ADDED : ஆக 12, 2024 02:25 AM

குன்னுார்;குன்னுாரில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரி மாவட்டம், தென்னகத்தின் நீர் தொட்டியாக உள்ளது. மடிப்பு மலைகளில் புல்வெளிகளாக இருந்த பகுதிகள், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தேயிலை எஸ்டேட்களாகவும், யூகலிப்டஸ், சீகை உள்ளிட்ட மரங்கள் மற்றும் வெளிநாட்டு களைச் செடிகளின் புகழிடமாகவும் மாற்றப்பட்டது.
காலப்போக்கில், சுற்றுலா மேம்பாட்டுக்காக வளர்ச்சி திட்டங்கள் அதிகரித்தது, அதற்கேற்ப கட்டுமானங்களும் அதிகரித்து வருகின்றன. இயற்கையை அழித்ததால், கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, மழை காலங்களில் அவ்வப்போது, இயற்கை பேரிடர் அதிகரித்து உயிரிழப்பும் தொடர்கிறது.
குன்னுாரில் நவம்பர் அபாயம்
குறிப்பாக, குன்னுாரில் அக்., நவ., மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது, நிலச்சரிவுகளும், உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகிறது.
இதை தொடர்ந்து நடந்த பல்வேறு ஆய்வுகளின் படி, குன்னுாரில், '84 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதிகள்; அதில், 15 இடங்கள் மிகவும் அபாயமுள்ள பகுதிகள்,' என, அறிவிக்கப்பட்டுள்ளன. பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும், வருவாய் துறையினர் நீரோடை மற்றும் ஆற்றோர பகுதிகளை சீரமைக்க எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வில்லை.
ஆறுகளை சூழ்ந்த முட்புதர்கள்
இங்குள்ள நீரோடைகள், ஆறுகள் துார் வாரப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்தும், குப்பை ஓரப்பகுதிகளில் தேங்கியும் காணப்படுகிறது. கடந்த, 2014ம் ஆண்டு 'பாரஸ்ட்டேல்' பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கிருஷ்ணாபுரம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் மனோகரன் கூறியதாவது:
வயநாடு போன்று, நீலகிரி மாவட்டத்தில் குன்னுாரும் பேரிடர் அபாய பகுதியாக உள்ளது. கனமழையின் போது மலை உச்சியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம், நீர் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதால் தடம் மாறி செல்கிறது.
இதன் காரணமாக, அருகில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுவதும் தொடர்கிறது. பெட்போர்டு, மவுண்ட் பிளசண்ட் போன்ற உயரமான பகுதிகளிலிருந்து, மழைநீர் வடிந்து வந்து ஆற்றில் கலக்கும் வகையில், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி வடிகால் கால்வாய்கள் அடைப்பட்டும்; ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
மேலும், கேஷ் பஜார், ரேலி காம்பவுண்ட், ராஜாஜி நகர், டிசான்ஜரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கால்வாய்களை காணவில்லை.
எனவே, பருவ மழையின் போது ஏற்படும் பேரிடரை தடுக்கும் வகையில், நீர்வழித்தடம் செல்லும் பகுதிகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். இங்குள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

