/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை மாவட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் திணறல்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் துரிதம்
/
மலை மாவட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் திணறல்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் துரிதம்
மலை மாவட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் திணறல்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் துரிதம்
மலை மாவட்டத்தை சூழ்ந்த வெள்ளத்தால் திணறல்; போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சீரமைப்பு பணிகள் துரிதம்
ADDED : ஜூலை 17, 2024 08:36 PM
கூடலுார் : நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை தவளைமலை அருகே, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மரம் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.
பாடந்துறை பகுதியில் விவசாய தோட்டங்கள் மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கல்லிங்கரை -போஸ்பரை சாலை உள்ள பாலம், குச்சிமுச்சி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதுமலை மாயார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், தெப்பக்காடு - மசினகுடி இடையேயான தற்காலிக சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டது பொதுமக்கள் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொரப்பள்ளி இருவயல் கிராமத்தில், தொரப்பள்ளி ஆற்று வெள்ளம் சூழ்ந்து, 11 வீடுகளில் சிக்கிய 45 பேரை, தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை, வருவாய் துறையினர் தொரப்பள்ளி அரசு பள்ளியில் தங்க வைத்தனர். சேமுண்டி பகுதியில் வீடு பாதிக்கப்பட்ட, 3 பேரை மீட்டு முகாமில் தங்க வைத்தனர்.
மேல்கூடலுார் கோக்கால் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வருவாய் துறையினர் அங்கு ஆய்வு செய்து, விரிசல் ஏற்பட்ட வீடுகளில் உள்ளவர்களை பிற வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர். அப்பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள, 55 பேரை மீட்டு பிற முதியோர் முகாமில் தங்க வைத்தனர். கூடலுார் பாடந்துரை பகுதியில் மழையின் காரணமாக வாழை மரங்கள் விழுந்தன. கூடலுாரில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், தீயணைப்பு வீரர்கள்; நெடுஞ்சாலை துறையினர்; மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
--* பந்தலுார் சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில், குடியிருப்புகள் சரிவான பகுதியில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு தொடர் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பாக விரிசல் ஏற்பட்டு உள்ளது. இப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியிலிருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டிய மேல் பகுதியில் இருந்து, மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுமையாக மூடியது. இதனால், இப்பகுதி மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டனர். பொக்லைன் வரவழைக்கப்பட்டு உடனடியாக மண் அகற்றி சீரமைக்கப்பட்டது. பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மக்கள் இப்பகுதி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
* குன்னுார் அருகே, கேத்தி ஆலன் நகர் பகுதியில் பாலன் என்பவரின் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த பாத்திரங்கள் உட்பட சில பொருட்கள் நாசமாகின. சம்பவ இடத்தை வருவாய் துறையினர் ஆய்தனர்.