ADDED : மார் 02, 2025 11:50 PM
பந்தலுார்; 'பந்தலுார் அருகே அத்திக்குன்னா அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது,' என, தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலுக்கு தகவல் கிடைத்தது.
அவர் உத்தரவையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருகேஸ்வரன், தலைமை காவலர்கள் சிகாபுதீன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர், அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை பள்ளி அருகே உள்ள கடையில் சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 7 கிலோ மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதேபோல, கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் தெரிய வந்தது. தொடர்ந்து, பூக்கோட்டு பாறை பகுதியை சேர்ந்த முகமது ரஃபீக்,32, கடை உரிமையாளர் ராபின்,26, ஆகியோர் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, நெல்லியாளம் பகுதியில் ஆய்வு செய்தபோது, தேயிலை தொழிற்சாலை அருகே உள்ள கடையில் பாக்கியநாதன்,28, என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, 90 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்த போலீசார், பாக்கியநாதனை கைது செய்தனர்.