/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளால் தொடரும் தொல்லை: விவசாயிகள் வேதனை
/
காட்டு யானைகளால் தொடரும் தொல்லை: விவசாயிகள் வேதனை
ADDED : செப் 03, 2024 01:52 AM

பெ.நா.பாளையம்:கோவை வடக்கு பகுதியில் மலையோர கிராமங்களில், வேளாண் நிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை வடக்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களான வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தினசரி இரவு நேரங்களில் காட்டு யானைகள் வேளாண் நிலங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்தும், சேதப்படுத்தியும் வருகின்றன.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள் வாரந்தோறும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும், இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லை.
வேளாண் நிலங்களுக்கு அருகே உள்ள தோட்டத்து வீடுகளுக்குள் நுழைந்து, அங்குள்ள மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள தீவனங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை எடுத்து வெளியே வீசி சேதப்படுத்துகின்றன. காட்டு யானைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், தினசரி வேளாண் பயிர்கள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி வருகின்றன.
இது குறித்து, சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில்,' யானைகளை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறுகின்றனர். சமீபத்தில் சின்ன தடாகம் வட்டாரத்தில் நடந்த வனத்துறை, விவசாயிகள் கூட்டு கூட்டத்தில், காட்டு யானைகளின் வரவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் உறுதி அளித்தனர். ஆனால், தொடர்ந்து காட்டு யானைகளின் வருகை அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்துக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என, வனத்துறையினருக்கு மனு கொடுத்து, பல மாதங்கள் ஆகியும் உரிய இழப்பீடு வரவில்லை.
இன்னும் இரண்டு வாரங்களில் இழப்பீடு வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளை, வன எல்லையிலேயே மறித்து, வனத்துக்குள் இருக்கச் செய்யும் திட்டத்தை அரசு வகுத்து, செயல்படுத்த முன்வர வேண்டும்' என்றனர்.