/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் பருவமழை; வயல்களில் உழவு பணி துவக்கம்
/
தொடரும் பருவமழை; வயல்களில் உழவு பணி துவக்கம்
ADDED : ஜூலை 31, 2024 11:59 PM

கூடலுார் : கூடலுாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் நெல் நடவுக்காக உழவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கூடலுார் பகுதியில் ஜூன் முதல் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர்நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. வயல்களில் நெல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதால், கடந்த மாதம் முதல் விதை நெல் விதைக்கும் பணிகளை மேற்கொண்டனர். நெல் நாற்றுகள் வளர்ந்து நடவுக்கு தயார் நிலையில் உள்ளது.
அவற்றை நடவு செய்வதற்காக, விவசாயிகள் டிராக்டர் மூலம் வயல்களில் உழவு பணிகளை துவங்கியுள்ளனர். கூடலுாரில் பருவமழையின் போது, அதிக அளவில் நெல் விவசாயம் செய்து வந்தாலும், அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல் விவசாயி முருகன் கூறுகையில், ''இப்பகுதி விவசாயிகளுக்கு, அரசின் சார்பில் நெல் விவசாயத்திற்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. இதனால், செலவுகள் அதிகரித்து, விவசாயத்தை கைவிடும் சூழல் உள்ளது. நெல் விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், அரசு மானிய உதவிகள் வழங்குவதுடன், நெல் விவசாயத்திற்கு தேவையான ஊழியர்களை, 100 நாள் வேலை திட்டத்திலிருந்து வழங்க வேண்டும்,'' என்றார்.