/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றின் கரையில் தொடரும் மண் அரிப்பு
/
ஆற்றின் கரையில் தொடரும் மண் அரிப்பு
ADDED : ஆக 13, 2024 01:51 AM

கூடலுார்:கூடலுார் புளியாம்பாறை ஆற்றின் கரையை ஒட்டிய விவசாய நிலத்தில் மண் அரிப்பை தடுக்க, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
கூடலுார் பகுதியில் நடப்பாண்டு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அவ்வப்போது பெய்து வரும் கனமழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய தோட்டங்கள், குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், புளியாம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், கரையை ஒட்டிய விவசாய நிலங்களில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதில், அட்டிக்கொல்லி பகுதியில், ஆற்றின் கரையில் தொடரும் மண் அரிப்பில், பலரின் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க, தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில், ஆற்றை துார்வாரி சீரமைக்கப்பட்டபோது, ஏற்கனவே ஆற்று நீர் இயற்கையாக சென்ற பகுதியை தடுத்து, சிறிது துாரம் குறுக்கே மண்ணை அகற்றி ஆற்றின் நீரை திருப்பி விட்டனர்.
இதனால், ஆற்றின் கரையில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு, சிலரின் விவசாய நிலமும் பாதித்து வருகிறது.
எனவே, இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் அரிப்பை தடுக்கும் வகையில், தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.