/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் கோடை மழை: நீங்கிய குடிநீர் தட்டுப்பாடு
/
தொடரும் கோடை மழை: நீங்கிய குடிநீர் தட்டுப்பாடு
ADDED : மே 20, 2024 11:36 PM

கூடலுார்:கூடலுாரில் தொடரும் கோடை மழையில், நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு நீங்கி வருகிறது.
கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் நடப்பு ஆண்டு துவக்கம் முதல் கோடை மழை ஏமாற்றியதால், ஏற்பட்ட வறட்சியினால் வனப்பகுதி பசுமை இழந்தும்; நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்ட நிலைக்கும் மாறியது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட இல்லாமல், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வன விலங்குகள் உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வனத்தீயில், வனப்பகுதியும் பாதிக்கப்பட்டது. முதுமலை வனப் பகுதிகளில் வனவிலங்குகள் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய, வன ஊழியர்கள் வாகனங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று சிமெண்ட் தொட்டிகளில் ஊற்றி வந்தனர்.
கோடை மழை இன்றி பசுந்தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள்
மேலும், நீரின்றி நேந்திரன் வாழை மரங்கள், காய்கறி உற்பத்தியும் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கூடலுாரின் பல்வேறு பகுதிகளில், காட்டு யானைகள் உணவு குடிநீர் தேடி இரவில் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வந்தன. யானை- மனித மோதல் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டது.
இந்நிலையில், கூடலுார், முதுமலை, மசினகுடி பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக, கோடை மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் தணிந்து வருகிறது. வறண்ட நீர்நிலைகளில் நீர்வரத்தும் துவங்கியுள்ளது. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி வருகிறது.
வனப்பகுதி பசுமைக்கு மாறி வருவதால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்க துவங்கியுள்ளது. பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளர். கோடை மழை தொடருவதால் தேயிலை, காபி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நெல் விவசாயத்துக்கு ஏற்ற மழை
விவசாயிகள் கூறுகையில், 'காலநிலை மாற்றத்தால் நடப்பு ஆண்டு ஜன., முதல் கோடை மழை ஏமாற்றி வந்தது. குடிநீர் மட்டுமின்ற, பாசன நீர் கிடைக்காமல், விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமலும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பை ஈடு செய்ய, அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது கோடை மழை பெய்து வருவது சற்று நிம்மதி ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் பருவமழை துவங்கினால், நெல் விவசாயத்தை சரியான நேரத்தில் துவங்க ஏதுவாக இருக்கும்,' என்றனர்.

