/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பை சேகரிக்கும் பணி ஆய்வில் சர்ச்சை; துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
/
குப்பை சேகரிக்கும் பணி ஆய்வில் சர்ச்சை; துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
குப்பை சேகரிக்கும் பணி ஆய்வில் சர்ச்சை; துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
குப்பை சேகரிக்கும் பணி ஆய்வில் சர்ச்சை; துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
ADDED : ஜூன் 13, 2024 11:35 PM

பந்தலுார் : நெல்லியாளம் நகராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணியை ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க, கூடலுார் பகுதியை சேர்ந்த தனியார் ஒருவரிடம் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாள்தோறும் குறைந்த அளவு குப்பை மட்டுமே வழங்கப்பட்டு, அதிகளவுக்கு கணக்கு எழுதப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது.
நேற்று முன்தினம் நகர மன்ற தலைவர் சிவகாமி மற்றும் வார்டு கவுன்சிலர் முரளி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அங்கு குப்பைகள் கொண்டு வந்த ஒரு லாரியில், 224 கிலோ மட்டுமே குப்பை இருந்துள்ளது.
இது குறித்து தலைவர் விசாரணை மேற்கொண்ட போது, தற்காலிக துப்புரவு பணியாளர்கள் -தலைவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ' நாள்தோறும் குப்பை கொண்டு வரும்போது உரிய ஆய்வு மேற்கொண்டு அதற்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 'தலைவரின் உதவியாளர் சைபுல்லா என்பவர் தங்களை தாக்கி விட்டார்,' என, கூறி தற்காலிக துப்புரவு பணியாளர் செந்தில்குமார் என்பவர் பந்தலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீதமுள்ள பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் உள்ளிட்டோர் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அதில், 'எப்போது வேண்டுமானாலும் குப்பை கிடங்கிற்கு தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொள்ளலாம்; ஆய்வின் போது வருவாய் துறை மற்றும் போலீசாரை உடன் அழைத்து செல்ல வேண்டும்,' என, தெரிவித்தனர்.
அதனை ஏற்று கொண்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.