/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் கொட்டி தீர்த்த மழையால் பாதிப்பு
/
பந்தலுாரில் கொட்டி தீர்த்த மழையால் பாதிப்பு
ADDED : ஜூலை 02, 2024 12:41 AM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் மீண்டும் கொட்டி தீர்த்த மழையால், விவசாய தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த, 28ஆம் தேதி மட்டும், 278 மி.மீ., மழை பதிவானது.
கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், விவசாயத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து மழை நீர் வடிய துவங்கியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மேங்கோரேஞ்ச் என்ற இடத்திலிருந்து பிதர்காடு பகுதி வரை கனமழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, மேங்கோரேஞ்ச் பகுதியில், 140 மி.மீ; அத்திக்குன்னா பகுதியில்,130 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.
இதனால், பொன்னானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாழவயல், பொன்னானி, சர்க்கரை குளம், பாலாவயல், மாங்கம்வயல் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த பகுதிகளில் கிராமப்புற சாலைகளில் ஆற்று வெள்ளம் புகுந்ததால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வுப் பணியில் பணியில் ஈடுபட்டனர்.