/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகள் பாதிப்பு :36 பேர் முகாமில் தங்க வைப்பு
/
குடியிருப்புகள் பாதிப்பு :36 பேர் முகாமில் தங்க வைப்பு
குடியிருப்புகள் பாதிப்பு :36 பேர் முகாமில் தங்க வைப்பு
குடியிருப்புகள் பாதிப்பு :36 பேர் முகாமில் தங்க வைப்பு
ADDED : ஜூலை 20, 2024 01:20 AM

பந்தலுார்:பந்தலுாரில் தொடரும் கனமழைால், சேரம்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளில் விரிசல் காரணமாக, 12 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் வீடுகளை காலி செய்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று, பந்தலுாரில் 104 மி.மீ., சேரங்கோடு பகுதியில், 126 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், சேரம்பாடி அருகே திருவள்ளுவர் நகர் என்ற இடத்தில், சரிவான பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளது. அதில், குஞ்சம்மா என்பவரது வீட்டின் பின்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, குடியிருப்பு பாதிக்கப்பட்டது.
அதனை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளிலும், பூமியில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் நடைபாதைகளும் இடிந்ததால், இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ. யுவராஜ் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று, 13 வீடுகளை காலி செய்து, 36 பேரை சேரம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில், தற்காலிக முகாமில் தங்க வைத்தனர். இவர்களுக்கு தேவையான தற்காலிக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதுடன், மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் இந்த பகுதியில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேறு பகுதியில் இடம் ஒதுக்கி, வீடுகளை கட்டித்தர வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,' அப்பகுதிகளை விரைவில் முழுமையாக ஆய்வு செய்து, அவருக்கும் பாதுகாப்பாக பகுதிகளில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.