/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல் விவசாயம் பாதிப்பு! போதிய பணியாட்கள் இல்லாமல் சிரமம்; 100 நாள் திட்ட பழங்குடிகள் அவசியம்
/
நெல் விவசாயம் பாதிப்பு! போதிய பணியாட்கள் இல்லாமல் சிரமம்; 100 நாள் திட்ட பழங்குடிகள் அவசியம்
நெல் விவசாயம் பாதிப்பு! போதிய பணியாட்கள் இல்லாமல் சிரமம்; 100 நாள் திட்ட பழங்குடிகள் அவசியம்
நெல் விவசாயம் பாதிப்பு! போதிய பணியாட்கள் இல்லாமல் சிரமம்; 100 நாள் திட்ட பழங்குடிகள் அவசியம்
ADDED : ஆக 21, 2024 11:39 PM

கேரளா மாநிலம் வயநாடு பகுதியை ஒட்டி, பந்தலுார் பகுதி அமைந்து உள்ளது. இதனால், மலைமுகடுகள், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், வயல் வெளிகள், வனப்பகுதிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இங்குள்ள வயல் பகுதிகளில் கடந்த காலங்களில், பழங்குடியின மக்கள் மற்றும் செட்டி சமுதாய மக்கள் நெல் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளாக தொடரும் காலநிலை மாற்றத்தால், காலம் மாறி பெய்யும் மழை; நெல் விவசாயம் தெரிந்த பணியாளர்கள் கிடைப்பதில் சிரமம்,போன்ற காரணங்களால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
தேயிலை தோட்டமான வயல்
இதனால், வயல்வெளிகள் தேயிலை, பாக்கு, வாழை மற்றும் காபி தோட்டங்களாக மாறி வருகிறது. தற்போது, மாநில எல்லை பகுதியான எருமாடு, தாளூர் சுற்று வட்டார பகுதிகளில், குரும்பர் சமுதாய பழங்குடியின மக்கள் மற்றும் செட்டி சமுதாயத்தினர் குறைந்த பரப்பிலான வயல்வெளியில் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதில், எருமாடு பகுதியில் பாஸ்கரன் என்பவர் தனது வயலில் நெல் விவசாயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு நாள் வரும் பணியர் சமுதாய பழங்குடியின மக்கள், மறுநாள் பணிக்கு வராத நிலையில், பறிக்கப்பட்ட நெல் நாற்றுகள் நடவு செய்ய வழி இல்லாமல் காய்ந்து வருகின்றன. குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபடும் நிலையில், வரும் காலங்களில் நெல் விவசாயம் முழுமையாக அழிந்து போகும் சூழலில் உள்ளதாக கவலை தெரிவித்தார்.
பாஸ்கரன் கூறுகையில், ''நாங்கள் பரம்பரையாக நெல் விவசாயம் மேற்கொள்கிறோம். கடந்த காலங்களில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட வயல்வெளிகள், தற்போது பல்வேறு மாற்று பயிர்களை விவசாயம் செய்யும் இடமாக மாறி வருகின்றன.
போதிய பணியாட்கள் இல்லாததால் சிரமப்படும் நிலையில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களில், நெல் விவசாயம் தெரிந்த பழங்குடியின பணியாளர்களை வயல்வெளிகளில் பணியாற்ற, அரசும், ஊராட்சி நிர்வாகம் நியமிக்க வேண்டும்.
நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வைத்துள்ளவர்களின், கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, 100 நாள் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், விவசாயிகள் நலன் பாதுகாக்கும் வகையில், நெல் விவசாய பணிக்கும் பழங்குடிகளை அனுப்ப வேண்டும்.
இல்லையெனில், நெல் விவசாயம் அழியும் அபாயம் ஏற்படும்,'' என்றார்.