/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த சாலை: சீரமைப்பு பணி துவங்குவதில் தாமதம்
/
சேதமடைந்த சாலை: சீரமைப்பு பணி துவங்குவதில் தாமதம்
ADDED : மே 22, 2024 12:25 AM

கூடலுார்:கூடலுார் கைதகொல்லி அருகே சாலையோரம் சேதமடைந்து, ஐந்து நாட்களாகியும் தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட துவங்காததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதியில் கடந்த வாரம் முதல் கோடை மழை பெய்து வருகிறது. அதில்,தேவாலா பகுதியில், 17ம் தேதி பெய்த பலத்த மழையின் போது, கைதகொல்லி வழியாக செல்லும் நீரோடையில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது, கோழிக்கோடு சாலை குறுக்கே உள்ள பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்பகுதியில், வாகனம் செல்லாத வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 'ரிப்பன்' கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெய்துவம் மழையின் போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சாலையோரம் மண்ணரிப்பும் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்த பகுதியை ஒட்டிய சாலையோரம் வெடிப்பு ஏற்பட்டுஉள்ளது.
இந்த பாதிப்பு ஏற்பட்டு, ஐந்து நாட்கள் ஆகியும் சாலையோர மண்ணரிப்பை தடுக்க தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட துவங்காததால் ஓட்டுனர்கள், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் சாலை ஓரங்கள் சேதமடைந்தால் அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மண் மூட்டைகளை அடுக்கி, தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வர்.
'ஆனால் இப்பகுதி சேதமடைந்து ஐந்து நாட்களாகியும், தற்காலிக சீரமைப்பு பணிகள் கூட துவங்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதை தடுக்க அப்பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

