/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த போராட்டம் நடத்த முடிவு
/
ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த போராட்டம் நடத்த முடிவு
ADDED : செப் 04, 2024 10:56 PM
குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில், அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிப்பதற்கு, ஐகோர்ட் தடையை அமல்படுத்த கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
'நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் சாதாரண பஸ்கள்,' என, வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இதனை மீறி, அரசு பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிக்கும் நிலையில், குன்னுாரை சேர்ந்த மனோகரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்க, ஐகோர்ட் தடை விதித்தது. எனினும், கோர்ட் உத்தரவை கண்டு கொள்ளாமல், அனைத்து சாதாரண பஸ்களும், 'எக்ஸ்பிரஸ்' களாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்துவது தொடர்பாக, குன்னுார், ஒய்.எம்.சி.ஏ, அரங்கில் பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் மனோகரன் தலைமை வகித்து பேசுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு பஸ்களும் சாதாரண கட்டணம் நிர்ணயம் செய்து அரசு ஆணை வழங்கியுள்ளது.
ஆனால், அரசு போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக பெரும்பாலான பஸ்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து வருகிறது.
இதனை தடை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு, பிப்., மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை கோர்ட் உத்தரவை அமல் படுத்தவில்லை.
எனவே, வரும், 18ம் தேதி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம் அனைத்து பொது நல அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட வேண்டும்,'' என்றார்.
துணைதலைவர் சுப்ரமணி, செயலாளர் ஆல்துரை, தர்ம சீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.