/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி உருளை கிழங்குகளுக்கு மாலத்தீவில் கிராக்கி
/
ஊட்டி உருளை கிழங்குகளுக்கு மாலத்தீவில் கிராக்கி
ADDED : ஜூன் 25, 2024 02:01 AM

மேட்டுப்பாளையம்,:மாலத்தீவில் ஊட்டி உருளை கிழங்குகளுக்கு வரவேற்பு உள்ள நிலையில், வரத்து குறைவால், விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானம், நெல்லித்துறை சாலை, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன.
இந்த மண்டிகளுக்கு குஜராத், மஹாராஷ்டிர மாநிலம் இந்தூர், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா, கர்நாடகா மாநிலம் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், கோலார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கு உருளைக்கிழங்குகள், தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. மாலத்தீவுக்கும், இலங்கைக்கும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஊட்டி உருளைக்கிழங்களுக்கு என தனி ருசியும், நிறமும் உள்ளதால், மற்ற மாநிலங்களின் கிழங்கை விட மாலத்தீவுக்கு ஊட்டி கிழங்குகளே அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாலத்தீவு வியாபாரிகள் ஊட்டி கிழங்குகளுக்கு அதிக வரவேற்பு தருகின்றனர்.
இதுகுறித்து உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறுகையில், ஊட்டி கிழங்குகள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. சீசன் முடிவடைந்ததால் வரத்து குறைந்துள்ளது.
தற்போது 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி கிழங்கின் விலை ரூ.2,500 முதல் ரூ.3,300 வரை விற்பனை ஆகிறது.
குஜராத் கிழங்குகள் ரூ.1,300 முதல் ரூ.1,650 வரையிலும், கோலார் கிழங்குகள் ரூ.1,600 முதல் ரூ.1,800 வரையிலும், அக்ரா கிழங்குகள், ரூ.1100 முதல் ரூ.1400 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆக்ரா, குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து வரும் உருளைக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 25 லோடு வரை கிழங்குகள் வருகின்றன என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஊட்டி கிழங்குகளின் விலை உயர்வால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். மாலத்தீவுக்கு ஊட்டி கிழங்குகள் செல்வது போல், உலகின் பல்வேறு இடங்களுக்கும் ஊட்டி கிழங்குகள் செல்ல வேண்டும்,' என்றனர்.