/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக்' இல்லாத நீலகிரி பசுமை அட்டை வினியோகம்
/
'பிளாஸ்டிக்' இல்லாத நீலகிரி பசுமை அட்டை வினியோகம்
ADDED : மார் 02, 2025 11:53 PM
ஊட்டி; ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில், 'பிளாஸ்டிக்' இல்லாத நீலகிரியை உருவாக்க, பசுமை அட்டை வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு போக்குவரத்து கழக, ஊட்டி கிளை மேலாளர் ராஜ்குமார் தலைமை வகித்து, பசுமை அட்டையை வெளியிட்டார். தொடர்ந்து, போக்குவரத்து அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் அரசு பஸ்களில் பசுமை அட்டையை வழங்கி, பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், ''பயணிகள் எவ்விதமான குப்பையாக இருப்பினும், சாலை மற்றும் வனப்பகுதியில் வீசும் பட்சத்தில், அவற்றை உட்கொள்ளும் கானுயிர்கள் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி இறந்து விடுகின்றன.
மேலும், வனப்பகுதிக்குள் வீசி எரியும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க முடியாத நிலையில், பல்வேறு விதைகள் முளைக்க ஆரம்பிக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளால் வனப்பகுதிக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. பறவைகள் கூடு கட்டுவதற்காக பிளாஸ்டிக் இலைகளை உபயோகிக்கும் போது அவற்றின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
மாவட்ட சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, பயணத்தின் போது பயணிகள் எவ்விதமான குப்பைகளை வீசி எறியாமல், பஸ் நிறுத்தத்தில் உள்ள குப்பை தொட்டியில் சேர்க்க முன்வர வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள், இயற்கை விவசாய சங்க பிரதிநிதிகள், வாகன தணிக்கை போலீசார், டிரைவர், கண்டக்டர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சகாதேவி நன்றி கூறினார்.