/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆழம், வேகம் தெரியாமல் வெள்ளத்தில் இறங்காதீர்:
/
ஆழம், வேகம் தெரியாமல் வெள்ளத்தில் இறங்காதீர்:
UPDATED : மே 25, 2024 06:24 AM
ADDED : மே 24, 2024 11:03 PM

சூலுார் : ''ஆழம் மற்றும் வேகம் தெரியாமல் வெள்ள நீரில் இறங்க கூடாது,'' என, தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
பருவ மழை மற்றும் வெள்ள காலங்களில், எவ்வாறு செயல்பட வேண்டும், என, சூலுார் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ( பொறுப்பு) ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் வீரர்கள், சூலுார் தாலுகா அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதிகாரிகள் பேசியதாவது:
பருவ மழை மற்றும் வெள்ள காலங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனமாக பின்பற்ற வேண்டும். வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும்.
வெள்ள காலங்களில் பதற்றமடையாமல் இருக்கவேண்டும். வதந்திகளை நம்பவும் வேண்டாம்; பரப்பவும் வேண்டாம். வெள்ளம் மற்றும் காட்டாறுகள் வேகமாக தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளும். அதனால் காலதாமதம் செய்யாமல் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்.
நீரின் ஆழம் மற்றும் வேகம் தெரியாமல் வெள்ள நீரில் இறங்க வேண்டாம். ஆறு அடி வெள்ள நீர், உங்களை கீழே வீழ்த்தி விடும். வெள்ளம் செல்லும் போது, கார், பைக்குகளில் கடக்க வேண்டாம்.
வெள்ள நீரில் சிக்கியவருக்கு அருகில் செல்ல கூடாது. நீண்ட கயிறு அல்லது குச்சியை அவருக்கு அருகில் வீசி, அதை அவர் பற்றிக்கொண்ட பின் மெதுவாக கரைக்கு இழுக்க வேண்டும். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

