/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குட்டியை ஈன்ற யானை: பாதுகாக்கும் கூட்டம்
/
குட்டியை ஈன்ற யானை: பாதுகாக்கும் கூட்டம்
ADDED : ஜூன் 13, 2024 11:26 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே வனப்பகுதியில் குட்டியை ஈன்ற யானையை பாதுகாக்கும் பணியில் யானை கூட்டம் ஈடுபட்டுள்ளது.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, காவயல் சுற்றுவட்டார பகுதியில் யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. நேற்று முன்தினம் யானைகள் தொடர்ந்து பிளிறியபடி இருந்துள்ளது.
வனக் குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொழிலாளர்கள் குடியிருப்பு ஒட்டிய சாலையோர வனப்பகுதியில், சிறிய குட்டியுடன் யானை நின்றிருந்ததை பார்த்துள்ளனர்.
மேலும் அதனை ஒட்டி பெரிய குட்டிகளுடன் மேலும் சில யானைகள், குட்டியை ஈன்ற யானைக்கு பாதுகாப்பாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருந்தது.
மேலும், யானை குட்டியை ஈன்ற பகுதியில் நீரோடை மற்றும் சிறிய குளங்கள் உள்ளதால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'இந்த வழியாக செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.