/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழிவுகள் கொட்டப்படும் எருக்கலாங் குளம்
/
கழிவுகள் கொட்டப்படும் எருக்கலாங் குளம்
ADDED : மே 01, 2024 11:19 PM
அன்னூர் : அன்னூர் அருகே 70 ஏக்கர் நீர் நிரம்பியுள்ள எருக்கலாங் குளத்தில் கழிவுகள் கொட்டப்படுகிறது.
அன்னூர் பேரூராட்சியில், குன்னத்தூராம்பாளையத்தில் உள்ள அத்திக்கடவு நீரேற்று நிலையத்தின் பின்புறம் துவங்கி கஞ்சப்பள்ளி வரை 90 ஏக்கர் பரப்பளவு எருக்கலாங்குளம் உள்ளது. இக் குளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 70 ஏக்கர் பரப்பளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. மழை நீர் மட்டுமல்லாமல், அத்திக்கடவு திட்ட நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் போது, மீதமாகும் நீர் இந்த குளத்தில் விடப்படுகிறது. குளத்தில் தேங்கியுள்ள நீரால் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய தோட்டங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்நிலையில் சிலர் இரவு நேரத்தில் கழிவுகளை குளக்கரையிலும், குளத்து நீரிலும் கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து அட்சயா சேவா சங்க நிர்வாகி தங்கராஜ் கூறுகையில், குளக்கரையில் தெரு விளக்குகள் அதிகமாக இல்லை. இதை பயன்படுத்தி தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் சிலர் குப்பைகளை இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர். இது குறித்து அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திடமும், கஞ்சப்பள்ளி ஊராட்சி நிர்வாகத்திடமும் தகவல் தெரிவித்துள்ளோம். இங்கு அதிக அளவில் தெருவிளக்குகள் பொருத்தி, குளத்தில் கழிவுகளை கொட்டுவோரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

