/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூன்று நாள் தடைக்கு பிறகு பத்திரப்பதிவு துவக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
/
மூன்று நாள் தடைக்கு பிறகு பத்திரப்பதிவு துவக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்று நாள் தடைக்கு பிறகு பத்திரப்பதிவு துவக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
மூன்று நாள் தடைக்கு பிறகு பத்திரப்பதிவு துவக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 31, 2024 01:42 AM
அன்னுார்:மூன்று நாள் தடைக்கு பிறகு, தொழில் பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட பகுதியில் நேற்று மீண்டும் பத்திரப்பதிவு நடந்தது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிட்கோ) கடந்த 2021ல் வெளியிட்ட அறிவிப்பில், 'அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பொகலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில், இலுப்பநத்தம், பள்ளேபாளையம், ஆகிய ஆறு ஊராட்சிகளில், 3,850 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது,' என தெரிவித்தது.
அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 'தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தில் மட்டுமே தொழில் பூங்கா அமையும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது,' என தெரிவிக்கப்பட்டது.
இதனால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்னுார் மற்றும் புளியம்பட்டி, சார் பதிவாளர் அலுவலகத்தில், 'டிட்கோ' அறிவித்த குப்பனுார் ஊராட்சி பகுதியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் சென்றனர்.
ஆனால் 'டிட்கோ' அறிவித்த பகுதியில் பத்திரப்பதிவு செய்ய முடியாது,' என பத்திர பதிவு அலுவலர்கள் திருப்பி அனுப்பினர்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அதிகாரிகள் உறுதி கூறிய நிலையில் தற்போது எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது என பத்திர பதிவு துறை அதிகாரிகள் கூறியது அதிர்ச்சி அளித்தது.
இதை தொடர்ந்து, 'நமது நிலம் நமதே' அமைப்பினர் மற்றும் தமிழக விவசாய சங்கத்தினர் நேற்று முன்தினம் எல்.கோவில் பாளையத்தில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' முகாமுக்கு சென்றனர்.
அங்கு நுழைவாயிலில் மூன்று மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தையில் அன்னுார் சார்பதிவாளர் செல்வ பாலமுருகன்,' டிட்கோ அறிவித்த பகுதியில் பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை,' என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
இதையடுத்து காத்திருக்கும் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நேற்று மதியம் அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் குப்பனுார் ஊராட்சியை சேர்ந்த மூன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. சார்பதிவாளர் அலுவலகம் அவற்றை பத்திர பதிவு செய்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'மூன்று நாட்கள் விதிக்கப்பட்ட தடையால் சிரமத்திற்கு உள்ளாகினோம். இன்று (நேற்று) மீண்டும் டிட்கோ அறிவித்த பகுதியில் பத்திரப்பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய நிலங்களை தொழில் பூங்காவுக்காக கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.
இதனால் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தங்கள் சொந்த பூமியை விட்டு வெளியேற நேரிடும். கால்நடை வளர்ப்பு அழியும். எனவே விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்,' என்றனர்.