/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
உருளை கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 29, 2024 02:48 AM

கோத்தகிரி : கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கேரட், பீட்ரூட் முட்டைகோஸ் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறி சாகுபடியை விட, உருளைக்கிழங்கு பயிர் செய்வதில் விவசாயிகளுக்கு முதலீடு அதிகம் தேவைப்படுகிறது.
விதை, உரம் உட்பட, இடுப்பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும், காட்டுப்பன்றி உட்பட, வனவிலங்குகளின் தொல்லை அதிகமாக இருப்பதால், மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது.
இருப்பினும், நீர் ஆதாரம் உள்ள நிலங்களில் விவசாயிகள் கூடுமானவரை கடன் பெற்று உருளைக்கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதத்தில், 100 ரூபாயை கடந்து உச்சத்தை தொட்ட உருளைக்கிழங்கு விலை, தற்போது, ஒரு கிலோ, 60 முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்திற்கு செலவிட்ட முதலீட்டை கணக்கிடும் போது இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானது இல்லை.
எதிர் வரும் நாட்களில், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் உருளைக்கிழங்கு தோட்டங்களை மிகுந்த சிரத்தையுடன் பராமரித்து வருகின்றனர்.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், ''ஊட்டி மார்க்கெட்டில், சராசரியாக கடைகளுக்கு, 1000 முதல் 2000 கிலோ என, 5000 ஆயிரம் கிலோ வரை உருளைக்கிழங்கு ஏலத்திற்கு வருகிறது. கடைகளில், ஒரு கிலோவுக்கு, 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், உருளைக்கிழங்கு அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் வரத்து அதிகரிப்பதுடன், விலையும் உயருவதற்கு வாய்ப்புள்ளது,''என்றார்.