/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கண்காட்சியில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் இல்லை; மலை மாவட்ட விவசாயிகள் வேதனை
/
கண்காட்சியில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் இல்லை; மலை மாவட்ட விவசாயிகள் வேதனை
கண்காட்சியில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் இல்லை; மலை மாவட்ட விவசாயிகள் வேதனை
கண்காட்சியில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் இல்லை; மலை மாவட்ட விவசாயிகள் வேதனை
ADDED : மே 10, 2024 11:34 PM

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்த மலர் கண்காட்சியில், காய்கறி வகைகள் குறைந்த எண்ணிக்கையில் காட்சிபடுத்தப்பட்டு இருந்ததால், மலை மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்டதன் நோக்கம், விவசாயிகள் பயன்பெறும் வகையில், நீலகிரியில் விளையும் காய்கறிகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக இருந்தது.
கடந்த காலங்களில், தாவரவியல் பூங்காவில், உருளைக்கிழங்கு, புருகோலி, செலாட், மஞ்சள் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள், கோதுமை வகைகள், கேழ்வரகு மற்றும் சாமை உள்ளிட்ட தானியங்கள்,' என, 84 வகையான உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்
அப்போது, காய்கறி மற்றும் தானிய வகைகளுக்கு சிறப்பு பரிசு பெறுவதை விவசாயிகள் பெருமையாக கருதி, தங்களது வீட்டு தோட்டங்களில் கூடுமானவரை பணம் செலவு செய்து, காய்கறி வகைகளை விளைவித்தனர்.
நாளடைவில், இந்த காய்கறி மற்றும் தானிய வகைகள் காட்சி படுத்துவது குறைக்கப்பட்டு, மலர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. எனினும், விவசாயிகளின் விளைபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நடப்பாண்டு 'கண்துடைப்பு' காட்சி
இந்நிலையில், நடப்பாண்டு, மலர் கண்காட்சியின் போது, விவசாயிகளிடம் இருந்து, 'குறைந்த வகையிலான காய்கறிகள் போதும்,' என, தோட்டக்கலைத்துறை மற்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, நேற்று துவங்கிய கண்காட்சியில், 'கண்துடைப்புக்காக' காய்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
ஊட்டி விவசாயி பிரகாஷ் கூறுகையில், ''கடந்த 45 ஆண்டுகளாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியின் போது, நீலகிரியில் விளையும் தனித்துவம் வாய்ந்த சிவப்பு நிறம், ரோஸ் நிறம் உருளைக்கிழங்கு வகைகள்; கருப்பு கேரட், கீரை வகைகள், சிவப்பு கேரட், முள்ளங்கி வகைகள் மற்றும் கீரை வகைகள் காட்சிபடுத்தப்பட்டன. இதனை பார்த்து சுற்றுலா பயணிகள் வியந்தனர்.
தற்போது, காய்கறி காட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. முக்கிய விருந்தினர்களை அழைத்து, காய்கறிகளை காண்பிப்பதில்லை.
கண்காட்சியின் போது விவசாயிகளை கண்டு கொள்வதே இல்லை. 'நடப்பாண்டு வெறும், 35 வகையான காய்கறிகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும்,' என, கூறியுள்ளனர்.
இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு உரித்தான காய்கறிகள் அழியும் நிலை உள்ளது. எனவே, துறை அதிகாரிகள் எதிர்வரும் ஆண்டுகளில், காய்கறி வகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்,''என்றார்.