மோட்டார் உதவியுடன் குடிநீர் திருட்டில் ஈடுபட்டால்... அபராதம்! :ஊட்டி நகரில் ஆய்வில் இறங்கிய நகராட்சி நிர்வாகம்
மோட்டார் உதவியுடன் குடிநீர் திருட்டில் ஈடுபட்டால்... அபராதம்! :ஊட்டி நகரில் ஆய்வில் இறங்கிய நகராட்சி நிர்வாகம்
UPDATED : ஜூலை 25, 2026 03:24 AM
ADDED : ஜூலை 24, 2026 05:22 PM

ஊட்டி: 'ஊட்டி நகரில் மோட்டார் உதவியுடன் குடிநீர் திருட்டில் ஈடுபட்டால், 5,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.50 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். வார்டு பகுதிகளுக்கு, 'பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, கீழ் கோடப்பமந்து, மேல்கோடப்பமந்து, டைகர்ஹில், ஓல்டு ஊட்டி,' உள்ளிட்ட நீராதார பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் கோடை மழை பொய்த்த நிலையில், தென் மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக பயன்படுத்தப்பட்டதால், நீராதார பகுதிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், நகராட்சி நிர்வாகம் மழை எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், நீராதார பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் குழாய்களிலிருந்து, சில ஓட்டல், காட்டேஜ்களுக்கு தண்ணீர் திருட்டுத்தனமாக எடுத்து செல்வதாக நகராட்சிக்கு புகார் வந்துள்ளது.
விதி மீறல் புகார்: மேலும், குடிநீர் தொட்டிகளிலிருந்து வார்டுகளுக்கு செல்லும் குடிநீர் குழாயிலிருந்து, சிலர் மோட்டார் இயந்திர உதவியுடன் திருட்டு தனமாக தண்ணீர் எடுப்பதாகவும், நகராட்சிக்கு புகார் வந்தது. தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி தலைமையில் தண்ணீர் திருட்டை தடுக்க குழு அமைக்கப்பட்டு, வார்டு வாரியாக திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் பார்த்த சாரதி கூறுகையில், '' நகராட்சி வார்டு பகுதிகளுக்கு, 10 குடிநீர் ஆதாரங்களிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பிரதான குழாய்களிலிருந்து சட்ட விரோதமாக மோட்டார் இயந்திரம் கொண்டு குடிநீர் திருட்டுத்தனமாக எடுக்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது.
நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கள ஆய்வின் போது மோட்டார் இயந்திரம் வாயிலாக குடிநீர் எடுப்பது கண்டறியும் பட்சத்தில், குடியிருப்புகளுக்கு, 5000 ரூபாய், குடியிருப்பு அல்லாத பயன்பாட்டிற்கு குடிநீர் எடுத்தால், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தவறு புரிந்தவர்கள், மீண்டும் விதிமீறி தண்ணீர் எடுத்தால், நகராட்சி சட்ட விதிகளுக்கு உட்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
