ADDED : செப் 14, 2026 04:41 PM
பாலக்காடு: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க) கேரள மாநிலத்தின் முதல் கிளை அலுவலகம், பாலக்காடு மாவட்டம் மேலார்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பிடி பகுதியில் செயல்பட தொடங்கியது.
மங்கலம்–கோவிந்தாபுரம் இடையேயான நெடுஞ்சாலையோரம், பள்ளிவாசல் அருகே நடந்த
திறப்பு விழாவை முன்னிட்டு, மேளதாளங்கள் முழங்க உற்சாக ஊர்வலம் நடந்தது. தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கட்சியின் மாவட்டச்செயலாளர் காஜா ஹுசைன் அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசுகையில், ‘‘இங்கு மக்கள் நலப்பணிகளுக்கே முதலிடம் வழங்கப்படும். அரசுப்பணி ஆணைய தேர்வுப்பயிற்சி மையம், இலவச ரத்ததான முகாம்கள், போன்ற மக்கள் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும். தலைவர் விஜய் உத்தரவிட்டால் தேர்தல் அரசியலிலும் தீவிரமாகக் களமிறங்குவோம். தொடர்ந்து, கேரள மாநிலம் முழுவதும் பல கிளை அலுவலகங்களை திறந்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.
