/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் வெள்ளம்! புதிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்த பழங்குடிகள்
/
ஆற்றில் வெள்ளம்! புதிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்த பழங்குடிகள்
ஆற்றில் வெள்ளம்! புதிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்த பழங்குடிகள்
ஆற்றில் வெள்ளம்! புதிய வீடுகளுக்கு இடம் பெயர்ந்த பழங்குடிகள்
ADDED : மே 24, 2024 10:19 PM

கூடலுார் : கூடலுார், இருவயல், மொளப்பல்லி கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்ததால், பழங்குடி மக்கள் புதிய தொகுப்பு வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்; மின்சாரம், அடிப்படை வசதிகள் அவசர தேவையாக உள்ளது.
கூடலுார், தேன்வயல், தொரப்பள்ளி அருகே உள்ள இருவயல், மொளப்பல்லி பழங்குடி கிராமங்கள் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளன. பருவமழையின் போது, ஆற்றில் அதிகரிக்கும் வெள்ளம் கிராமங்களில் நுழைவது தொடர்ந்ததால், அப்பகுதியில் வசிக்க சிரமப்பட்டு வந்தனர். அரசு இவர்களுக்கு மாற்றிடம் வழங்க முடிவு செய்தது.
பழங்குடிகளுக்கு புதி வீடு
அதன்படி, தேன்வயல் கிராமத்தைச் சேர்ந்த, 16 பழங்குடி குடும்பங்களுக்கு, தொரப்பள்ளி அருகே புதிய வீடுகள் கட்டப்பட்டு, அதில் குடியமர்த்தப்பட்டனர். இருவயல், மொளப்பல்லி கிராமங்களில் வசிக்கும், 18 பழங்குடி குடும்பங்களுக்கு, தொரப்பள்ளி குன்னு பகுதியில், ஒதுக்கப்பட்ட மாற்றிடத்தில், புதிய வீடுகள் கட்டும் பணி கடந்த ஆண்டு நடந்தது.
இந்த வீடுகளுக்கு குடிநீர், மின் இணைப்பு வழங்காததால், இருவயல், மொளப்பல்லி கிராம பழங்குடி மக்களுக்கு புதிய வீடுகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் நான்கு குடும்பங்கள் மட்டும் புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர். மற்றவர்கள்,புதிய வீடுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் அங்கு செல்வதாக தெரிவித்தனர்.
கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்
இந்நிலையில், கூடலுாரில் தொடரும் மழையில், இரு நாட்களுக்கு முன், குணில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், இருவயல், மொளப்பல்லி கிராமத்துக்குள் புகுந்தது.
குடிசை வீடுகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. நேற்று முன்தினம், வருவாய் துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று, அனைவரையும் புதிய வீடுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், அங்கு குடிநீர், மின்சாரம் இல்லாததால் செல்ல மறுத்துவிட்டனர்.
உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, புதிய வீடு அமைந்த பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தந்ததுடன், மின் இணைப்பு வழங்கும் நடவடிக்கையும் துவங்கினர். மேலும், 'மின் இணைப்பு கிடைக்கும் வரை, வீடுகளில் மின்விளக்கு எரிய ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை வழங்கப்படும். கிராம மக்கள் புதிய வீடுகளுக்கு செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.
இதனை ஏற்று கிராம மக்கள் தங்கள் உடமைகளுடன் புதிய தொகுப்பு வீடுகளுக்கு சென்றனர். நீண்ட இழுபறிக்கு பின், பழங்குடி மக்கள் புதிய வீடுகளுக்கு சென்றதால் வருவாய்த் துறையினர் நிம்மதி அடைந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'பழங்குடியினருக்கான புதிய வீடுகளில் மின் சப்ளை வழங்குவதற்கான பணிகள் மின்துறை சார்பில் நடந்து வருகிறது. பிற அடிப்படை தேவைகளும் விரைவில் ஏற்படுத்தி தரப்படும். கிராமங்களை அடிக்கடி வெள்ளம் சூழ்ந்து வருவதால் மக்கள் புதிய வீடுகளில் தங்குவது பாதுகாப்பாக இருக்கும்,' என்றனர்.

