/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானையிடம் உயிர் தப்பிய முதியவர்: மருத்துவ செலவுக்கு வனத்துறை உதவி
/
யானையிடம் உயிர் தப்பிய முதியவர்: மருத்துவ செலவுக்கு வனத்துறை உதவி
யானையிடம் உயிர் தப்பிய முதியவர்: மருத்துவ செலவுக்கு வனத்துறை உதவி
யானையிடம் உயிர் தப்பிய முதியவர்: மருத்துவ செலவுக்கு வனத்துறை உதவி
ADDED : ஜூன் 10, 2024 12:29 AM

பந்தலுார்;பந்தலுாரில் காட்டு யானையிடம் உயிர் தப்பிய முதியவர், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பந்தலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டைக்கொம்பன் மற்றும் புல்லட் என்று அழைக்கப்படும் இரண்டு ஆண் யானைகள், ஒன்றாக சேர்ந்து சுற்றி வருகின்றன. அதில், கட்டைக்கொம்பன் என்று அழைக்கப்படும் யானை, சாதுவாக உள்ளது. புல்லட் என்ற யானை மனிதர்களைப் பார்த்தால் புல்லட் போல வேகமாக வந்து தாக்கிவிடும்.
இந்நிலையில், அய்யன்கொல்லி அருகே, பாதிரிமூலா கிராமத்திற்கு இரண்டு யானைகளும் வந்துள்ளது. வனத்துறையினர் யானைகளை துரத்த முயன்றபோது, அவர்களை தாக்க முற்பட்டதால், ஒலிபெருக்கி மூலம், 'பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தி உள்ளனர்.
அப்போது, மதியழகன், 58, என்ற முதியவர் யானைகள் எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்க்க, வீட்டு வாசலில் இறங்கி உள்ளார்.
அப்போது அவரை தாக்குவதற்காக புல்லட் என்ற யானை ஓடி சென்றது. யானையிடமிருந்து தப்பிக்கஓடி கீழே விழுந்து, வீட்டிற்குள் சென்றதால் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வனவர் முத்தமிழ், வனக்காப்பாளர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து, காயமடைந்த முதியவரை பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், சிகிச்சைக்கு முதல் கட்டமாக பண உதவியும் வனத்துறை மூலம் வழங்கப்பட்டது.
யானைகள் இரண்டும் அதேபகுதி தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால், வனக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.