/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் வெட்டப்பட்ட இடத்தில் வனத்துறை ஆய்வு
/
மரம் வெட்டப்பட்ட இடத்தில் வனத்துறை ஆய்வு
ADDED : பிப் 23, 2025 11:46 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் எஸ்டேட், வனப்பகுதியில் மரங்கள் வெட்டிய இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் எஸ்டேட் நிர்வாகம், தங்கள் தோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சில்வர் ஓக், மீசோபிஸ் ஆகிய 1,861 மரங்களை வெட்ட, மாவட்ட கமிட்டியிடம் அனுமதி கோரியிருந்தது.
தொடர்ந்து, தமிழ்நாடு மலைப்பகுதி மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள மரங்களை மட்டும், வெட்டுவதற்கு கடந்த ஆண்டு, செப்., மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
அதில், '20 விதிமுறைகளை கடைபிடிக்கவும், 4 மாதங்களுக்குள் பணியை முடிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்ததால் தற்போது மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் அனுமதி கோரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இங்கு விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக, வனத்துறைக்கு புகார் வந்தது.
தொடர்ந்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு அறிவுரையின்படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் தலைமையிலான வனக்குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 'மரங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வெட்டப்பட்டது,' என, தெரிய வந்தது. மேலும், அங்கு சாலையின் குறுக்கே பாயும் நீரோடையை கடக்க, மரங்கள் மூலம் தற்காலிக சிறுபாலம் அமைத்துள்ளனர். அது குறித்து விசாரணை நடத்தினர். 'வரும் நாட்களில் விதிமுறைகளை மீறி மரங்களை வெட்ட கூடாது,' என, அறிவுறுத்தி சென்றனர்.